‘தி ஆன்லைன் சிட்டிசன்’ (TOC) இணையத்தளத்திற்கு, இணையத்தில் வேண்டுமென்றே பொய்ச்செய்தி பரப்புவதற்கு எதிரான சட்டத்தின்கீழ் (பொஃப்மா), திருத்தம் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் மரண தண்டனை குறித்த மாறுபட்ட கருத்துகளை ஒடுக்குவதற்கு அரசாங்கம் பொய்ச்செய்திக்கு எதிரான சட்டத்தைப் பயன்படுத்துவதாக ‘டிஓசி’ வெளியிட்ட பதிவுகளுக்கு அவ்வாறு திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
‘டிஓசி’ நவம்பர் 22ஆம் தேதி வெளியிட்ட கட்டுரையில் அரசாங்கம் குறித்து அவ்வாறு தவறான தகவலை வெளியிட்டிருந்தது. மரண தண்டனை குறித்த மாறுபட்ட கருத்துகளை பொஃப்மா சட்டத்தின்கீழான திருத்த உத்தரவுகள் மூலம் அரசாங்கம் ஒடுக்கிவிட்டதாக அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. சமூக ஊடகங்களிலும் அக்கட்டுரை பகிரப்பட்டது என்று உள்துறை அமைச்சு டிசம்பர் 16ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
‘சிங்கப்பூரின் மரண தண்டனை: தடையா, அறிவிப்பா, குருட்டுத்தனமான நம்பிக்கையா?’ என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரையை ‘டிஓசி’ செய்தியாசிரியர் டெர்ரி ஸு எழுதியுள்ளார்.
சிங்கப்பூரில் மரண தண்டனையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பிரசாரம் செய்யும் ‘டிரான்ஸ்ஃபர்மேட்டிவ் ஜஸ்டிஸ் கலெக்டிவ்’ (TJC) போன்ற குழுக்களின் பதிவுகள் எத்தகைய தகவலை வெளியிட்டாலும் அது பொய்ச்செய்தி என்று குறிப்பிடும்படி பொஃப்மா சட்டத்தின்கீழ் அமைச்சர் திருத்த உத்தரவு பிறப்பிப்பதாக அந்தக் கட்டுரை கூறியது.
மாற்றுக் கண்ணோட்டத்தை ஒடுக்கி, அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு வலுச்சேர்க்கும் இத்தகைய நடவடிக்கையால் ‘டிஜேசி’ போன்ற குழுக்கள் தங்களின் கண்ணோட்டம் அரசாங்கத் தரநிலைப்படி தவறானது என்று ஒப்புக்கொள்ளக் கட்டாயப்படுத்தப்படுவதாக அந்தக் கட்டுரை குறிப்பிட்டது.
மரண தண்டனை விவகாரம் தொடர்பில் ‘டிஜேசி’க்கு அண்மைய மாதங்களில் பலமுறை திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பொய்ச்செய்தி வெளியிடப்பட்டாலோ பொதுமக்களின் நலன்கருதியோ மட்டுமே திருத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன என்று உள்துறை அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பொஃப்மா திருத்த உத்தரவைப் பெறும் தரப்பு அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றோ மூலக் கட்டுரையை அகற்றும்படியோ அது வலியுறுத்துவதில்லை என்று அமைச்சு கூறியது.
மூலப் பதிவிற்கு அருகில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் தகவலும் இடம்பெற வேண்டியது மட்டுமே கட்டாயம். வாசகர்கள் அதனால் பொய்ச்செய்தி குறித்த பதிவையும் அரசாங்கத் தெளிவுரையையும் ஒருங்கே படித்து சுயமாக முடிவெடுக்க அது உதவும் என்று அமைச்சு சொன்னது.
அரசாங்கத்தின் திருத்த உத்தரவு குறித்து டிசம்பர் 16ஆம் தேதி ‘டிஓசி’ ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. பொஃப்மா குறித்தும் அமைச்சர் சண்முகத்தின் நேர்காணல் குறித்தும் நவம்பர் 22ஆம் தேதி வெளியான கட்டுரையின் தகவல்களை அந்த உத்தரவுகள் தவறாகச் சித்திரிப்பதாக அது கூறியுள்ளது.

