எதிர்க்கட்சி அரசியல்வாதியான கென்னத் ஜெயரத்னத்திற்கு பொய்த் தகவல்களுக்கு எதிரான பொஃப்மா சட்டத்தின்கீழ் அவர் பதிவுசெய்த தவறான தகவல்களுக்கு எதிராக திருத்தக் கூறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் தனது பதிவில் துணை காவல்துறை அதிகாரிகளை நியமிப்பதில் தவறான தகவல்களை பதிவிட்டார் என்று கூறப்படுகிறது. இது குறித்து உள்துறை அமைச்சு வெள்ளிக்கிழமை (மார்ச் 21ஆம் தேதி) வெளியிட்ட அறிக்கையில், திரு ஜெயரத்னம் ‘த ரைஸ்போல் சிங்கப்பூர்’ என்ற அவரது இணையப்பக்கத்தில், ஃபேஸ்புக், எக்ஸ் தளத்தில் தவறான தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. சீர்திருத்தக் கட்சியின் தலைவரான திரு ஜெயரத்னத்திற்கு தற்பொழுது விடுக்கப்பட்ட பொஃப்மா உத்தரவு அவருக்கு விடுக்கப்பட்டிருக்கும் 10வது உத்தரவாகும். உள்துறை அமைச்சின் கூற்றுப்படி, திரு ஜெயரத்னம் துணை காவல்துறை அதிகாரிகளுக்கு வழக்கமான காவல்துறை அதிகாரிகளுக்கு இருக்கும் அதிகாரம் உள்ளது. வெளிநாட்டினரான அவர்களை நியமிப்பது மக்கள் செயல் கட்சியை ஆட்சி அதிகாரத்தில் நீடித்திருக்க எடுக்கும் நடவடிக்கை.
இது அரசியல் நிர்ணயச் சட்டத்திற்கு எதிரானது, மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியது. துணைக் காவல்துறை அதிகாரி வேலை சிங்கப்பூரர்களை ஈர்க்காமல் இருக்க அவர்களை நியமிப்பதில் அரசாங்கம் வேண்டுமென்றே குறைந்த ஊதியத்தை நிர்ணயித்து உள்ளது போன்ற தவறான தகவல்களை பதிவு செய்திருந்தார். இதை மறுத்த அரசாங்கம், துணைக் காவல் அதிகாரிகளுக்கு வழக்கமான காவல்துறை அதிகாரிகளுக்கு இருக்கும் அதிகாரம் இருக்கவில்லை என்று கூறியுள்ளது. காவல்துறை அதிகாரிகளுக்கு இருக்கும் விசாரணை அதிகாரம் இவர்களுக்கு கிடையாது.
மேலும், துணைக் காவல்துறை அதிகாரிகளை அந்தக் காவல் துறையே நியமித்து அவர்களுக்கான ஊதியத்தை அந்தத் துறையே நிர்ணயிக்கிறது என்றும் அரசு விளக்கியது. இதற்கும் அரசாங்கத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அது தெளிவுபடுத்தியது.