சீன சமூகத் தலைமைத்துவப் பயிற்சி வகுப்பு குறித்துத் தவறான கருத்தை வெளியிட்ட டிக்டாக் பயனர் ஜெய் இஷ்ஹாக் ராஜூவுக்கு இணையப் பொய்யுரைக்கும் சூழ்ச்சித்திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (பொஃப்மா) ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 7) திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
திரு ஜெய் ஆகஸ்ட் 26ஆம் தேதி வெளியிட்ட டிக்டாக் பதிவில், புதிய சீன சமூகத் தலைமைத்துவப் பயிற்சி வகுப்பு குறித்து தவறான கருத்துகள் இடம்பெற்றிருந்ததால், அவருக்குப் பொஃப்மா உத்தரவு பிறப்பிக்க கலாசார, சமூக, இளையர்துறை தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ உத்தரவிட்டார்.
சீன நாட்டவரை சிங்கப்பூருக்கு ஈர்க்கவும் அவர்களைத் தலைமைத்துவப் பதவிகளுக்குத் தயார்ப்படுத்தவும் அரசாங்கம் பணத்தையும் வளங்களையும் வழங்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் அறிவித்ததாக திரு ஜெய் தமது பதிவில் கூறியிருந்தார்.
மேலும், சீன இனத்தைச் சேர்ந்த தலைவர்களைப் பேணுவதற்கு மட்டுமே அரசாங்கம் தனது பணத்தையும் வளங்களையும் பயன்படுத்துகிறது என்றும் திரு ஜெய் கூறியிருந்தார்.
அரசாங்கத்தின் சீன சமூகத் தொடர்புக் குழுவின் தலைவருமான திரு சீ, ஆகஸ்ட் 20ஆம் தேதி அப்பயிற்சி வகுப்பை அறிமுகப்படுத்தினார்.
“திரு ஜெய் வெளியிட்ட தவறான தகவல்கள், கடுமையான தவறான புரிதல்களை ஏற்படுத்துவதோடு இனம், மொழி அல்லது சமயம் பாராமல் சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூரர்களின் நலனுக்காக சேவையாற்றுவதற்கான அரசாங்கத்தின் கடப்பாடு மீதான மக்களின் நம்பிக்கையையும் சீர்குலைக்கிறது,” என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்தது.
“பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கவும் சரியான தகவல் தெரிவிப்பதை உறுதி செய்யவும் திரு ஜெய்க்கு அமைச்சு பொஃப்மா திருத்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்மூலம், அவர் தமது டிக்டாக் பக்கத்தில் திருத்த குறிப்பை வெளியிட வேண்டும்,” என்றது அமைச்சு.
திரு ஜெய் தமது பதிவில் கூறியதை மறுத்த அமைச்சு, சீன சமூகத்தில் துடிப்புடன் ஈடுபட்டு ‘சேவையாற்ற ஆர்வமுள்ள’ சிங்கப்பூர் குடிமக்கள் மட்டுமே சீன சமூகத் தலைமைத்துவப் பயிற்சி வகுப்புக்குத் தகுதிபெறுவார்கள் என்று கூறியது.
தொடர்புடைய செய்திகள்
மற்ற நாட்டுக் குடிமக்கள் இப்பயிற்சி வகுப்புக்குத் தகுதிபெற மாட்டார்கள் என்றும் அமைச்சு சொன்னது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.45 மணி நிலவரப்படி, திரு ஜெயின் டிக்டாக் காணொளி அவருடைய பக்கத்தில் இல்லை. அரசாங்கத்தின் விளக்கத்திற்கான இணைப்புடன், ஒரு புதிய பதிவை திரு ஜெய் வெளியிட வேண்டும் என்று திருத்த உத்தரவு கோருகிறது.