சிங்கப்பூரில் அண்மையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மூவர் தொடர்பாக உண்மைக்கு மாறான தகவல்களைச் சமூக ஊடகப் பதிவுகளில் வெளியிட்டதற்காக மரண தண்டனைக்கு எதிரான குழு ஒன்றுக்கு பொஃப்மா திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ரோஸ்மான் அப்துல்லா, ரோஸ்லான் பக்கார், பவுஸி ஜெஃப்ரிடின் ஆகிய ஆடவர்களின் அறிவுத்திறனையும் உளவியல்-சமூகக் குறைபாடுகளையும் பொருட்படுத்தாமல் அந்த மூவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சமூக ஊடகங்களில் பொய்யான பதிவுகள் வெளியிடப்பட்டதாக உள்துறை அமைச்சு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26) கூறியது.
அதனைத் தொடர்ந்து, அந்தப் பதிவுகளை வெளியிட்ட ‘டிரான்ஸ்ஃபர்மேட்டிவ் ஜஸ்டிஸ் கலெக்டிவ்’ (TJC) என்னும் ஃபேஸ்புக் குழுவுக்கு எதிராக, ‘பொஃப்மா’ எனப்படும் இணையம்வழி பொய்ச்செய்திக்கும் சூழ்ச்சித் திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பொஃப்மா அலுவலகம் அந்த உத்தரவைப் பிறப்பித்தது.
அந்தப் பதிவுகள் நவம்பர் 20ஆம் தேதி ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் வெளியானதாக அமைச்சு தெரிவித்தது.
TJC ஃபேஸ்புக் குழுவின் இன்ஸ்டகிராம் பதிவின் கூட்டுப் பதிவாளர்களாக திருவாட்டி கோகிலா அண்ணாமலையும் திரு ராக்கி ஹோவ்வும் குறிப்பிடப்பட்டு உள்ளனர்.
அவர்களில், திருவாட்டி கோகிலா ஏற்கெனவே அக்டோபர் 5ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஒரு பொஃப்மா உத்தரவை மீறியதற்காக விசாரணையை எதிர்நோக்கி உள்ளார்.
மரண தண்டனைக் கைதிகளுக்கான சட்ட நடைமுறை பற்றிய சமூக ஊடகப் பதிவுகளுக்கு திருத்தம் வெளியிடுமாறு அவருக்கு அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
தற்போது TJC குழுவுக்கு எதிரான பொஃப்மா உத்தரவின்படி, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பதிவுகளுக்குத் திருத்தம் வெளியிட வேண்டும். அதனுடன், அரசாங்கக் கருத்துகள் அடங்கிய இணையத் தொடர்பை இணைக்க வேண்டும்.
உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.