சீ சூன் ஜுவானுக்கு எதிராகப் போட்டியிடும் போ லி சான்

2 mins read
32e55821-8106-43f1-b5de-79746efa4aa4
திருவாட்டி போ லி சானுக்கு எதிராகச் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவான் போட்டியிடுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதியில் செம்பவாங் குழுத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திருவாட்டி போ லி சான், 50, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சித் தலைமைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவானை எதிர்த்துப் போட்டியிட உள்ளார்.

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் அதை அறிவித்தார். முன்னதாக, செம்பவாங் குழுத்தொகுதியில் அங்கம் வகித்த செம்பவாங் வெஸ்ட் பகுதியை அவர் வழிநடத்தி வந்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய திருவாட்டி போ, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் சீ சூன் ஜுவான் கடுமையான போட்டியை அளித்தாலும் அந்தச் சவாலிலிருந்து விலகும் மனப்பான்மை தமக்கு இல்லை என்றார்.

“நான் நன்றாகச் சேவையாற்றி வருகிறேன் என்பது குடியிருப்பாளர்களுக்குத் தெரிந்த ஒன்று. தேர்தலுக்கு ஒரு மாதம் முன்னர் வந்து குடியிருப்பாளர்களுடன் பழகுவதற்கும் அவர்களுடன் பல ஆண்டுகள் பின்னிப் பிணைந்துள்ள எனக்கும் வேறுபாடுகள் உள்ளன,” என்றார் திருவாட்டி போ.

குடியிருப்பாளர்களின் கவலைகள் குறிப்பாக வேலை வாய்ப்புகள் பற்றி நாடாளுமன்றத்தில் தாம் குரல் தருவதாகக் கூறிய அவர், பொதுச் சுகாதாரம், செம்பவாங், உட்லண்ட்ஸ் பகுதிகளின் உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்தத் திட்டம் வைத்துள்ளதாகச் சொன்னார்.

வீடுகள், பொது இடங்கள், மூத்தோருக்கு ஆதரவு, குறிப்பாகத் துடிப்புடன் மூப்படைதலுக்கான இரண்டு புதிய நிலையங்களை அமைப்பது ஆகியவை அவர் திட்டங்களில் அடங்கியுள்ளன.

உலகளாவிய நிச்சயமற்ற தன்மையைக் குறித்துப் பேசிய திருவாட்டி போ, சிங்கப்பூரில் வேலையின்மை, சாத்தியமான பொருளியல் மந்தநிலை ஆகிய சவால்கள் ஏற்படும்போது நாட்டை வழிநடத்திச் செல்ல வலுவான அரசாங்கம் தேவை என்றார்.

“மக்கள் செயல் கட்சி சிங்கப்பூரைச் சவால்களிலிருந்து பாதுகாக்கக் கடுமையாக உழைத்துள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

2020 பொதுத் தேர்தலில் அப்போது கல்வி அமைச்சராக இருந்த திரு ஓங்கின் ஐந்து உறுப்பினர் கொண்ட செம்பவாங் குழுத்தொகுதியில் உறுப்பினராக இருந்தார் திருவாட்டி போ.

தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சிக்கு எதிராகச் செம்பவாங் குழுத்தொகுதியில் போட்டியிட்ட மக்கள் செயல் கட்சி 67.29 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றி கண்டது.

புதிய செம்பவாங் வெஸ்ட் குழுத்தொகுதியில் வீவக வீடுகளில் வசிக்கும் ஏறத்தாழ 24,000 வாக்காளர்கள் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்