ஜூன் 25ஆம் தேதியன்று ஈஸ்ட் கோஸ்ட் லகூன் ஃபூட் வில்லேஜில் தாய் மீதும் அவரின் 2 வயது மகள் மீதும் மிதிவண்டி மோதிக் காயம் ஏற்படுத்திய சைக்கிளோட்டியைக் காவல்துறை தேடிவருகிறது. சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் முன்வருமாறு காவல்துறை கேட்டுக்கொண்டது.
அந்த சைக்கிளோட்டியைப் பற்றி தகவல் தெரிந்தால், காவல்துறையை 1800-255-0000 என்னும் 24 மணி நேரத் தொலைபேசி எண்ணில் அழைக்கலாம் அல்லது www.police.gov.sg/i-witness என்ற இணையத்தளத்தில் தகவலைத் தெரிவிக்கலாம் எனக் காவல்துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்தது.
தெரிவிக்கப்படும் அனைத்துத் தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் எனவும் காவல்துறை கூறியது.
மதிய உணவுக்குப்பின் நானும், என்னுடைய குடும்பத்தாருடம் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது வேகமாக வந்த மிதிவண்டி ஒன்று எங்கள் மீது மோதியது.
மிதிவண்டிகளும் பாதசாரிகளும் செல்லும் பாதைகள், இணையும் அந்தத் தடத்தில் தாமும் தன் கணவர், 4 வயது மகன், 2 வயது மகள் ஆகியோர் போய்க்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது என திருவாட்டி ஜோடி லாய், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் ஜூன் மாதம் கூறினார்.
திருவாட்டி லாய் மீதும் அவரின் மகள் மீதும் மிதிவண்டி மோதியதில் திருவாட்டி லாய் கீழே விழுந்து அவருக்குத் தலையிலும் முதுகிலும் அடிப்பட்டுவிட்டது. மகள் முன்னோக்கி விழுந்ததில் அவரின் முகம், கைகள், கால்கள் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது.
திருவாட்டி லாய்க்கு 10 நாள்களுக்கு மருத்துவமனை விடுப்பு வழங்கப்பட்டது.