கிளமெண்டியில் நிகழ்ந்த கொலைச் சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டு உள்ள ஆடவர், அந்தக் குற்றச் செயல் நிகழ்ந்த பகுதிக்கு திங்கட்கிழமை (அக்டோபர் 28) கொண்டு செல்லப்பட்டார்.
தோ சீ ஹோங், 50, எனப்படும் அவர் கிளமெண்டி அவென்யூ 4வில் உள்ள புளோக் 311சி-க்குக் காலை 10.20 மணியளவில் கொண்டு செல்லப்பட்டபோது ஐந்து காவல்துறை அதிகாரிகள் அவரைச் சூழ்ந்து காணப்பட்டனர்.
அக்டோபர் 21ஆம் தேதி வின்சன் கூ சின் வா எனப்படும் 41 வயது ஆடவரை கிளமெண்டி அவென்யூ4, புளோக் 311பி-யில் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
புளோக்கின் வெற்றுத்தளத்திற்கும் 19வது மாடிக்குச் செல்லும் மின்தூக்கிக்கும் தோ அழைத்துச் செல்லப்பட்டார்.
முற்பகல் 11.15 மணியளவில் வெற்றுத்தளத்தில் அவரை ஏழு காவல்துறை அதிகாரிகள் சூழ்ந்திருந்தனர்.
அந்த இடத்தில் அதிகாரிகள் கேள்விகள் கேட்டபோது தலைகுனிந்தவாறே அந்த ஆடவர் தலையசைத்தார்.
தரையை நோக்கி தோ சைகைக் காண்பித்தபோது, அதிகாரிகள் அந்த இடத்தை வரைந்து குறித்துக்கொண்டனர்.
பின்னர், 11.30 மணியளவில், அருகில் உள்ள பலமாடி கார்நிறுத்தத்திற்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அப்போது அப்பகுதியின் அருகே 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
பத்து நிமிடம் கழித்து கறுப்பு நிற வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டார் அந்த ஆடவர். பின்னர் அந்த வாகனம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் என்னவென்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
இருப்பினும், புளோக் 311பி-யின் கீழ்த்தளத்தில் சிறிய பொருள் ஒன்றால் பல தடவை அவர் குத்தியது குடியிருப்பாளர்கள் பதிவுசெய்த காணொளியில் தெரிந்தது.
கொலை செய்யப்பட்ட திரு கூ அடித்தள அமைப்புகளின் தொண்டூழியர் என்று மக்கள் கழகம் கூறியது.
இருப்பினும், கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட தோ, எந்த ஒரு மக்கள் கழக அடித்தள அமைப்பிலும் உறுப்பினராக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
கிளமெண்டி சம்பவத்தையும் சேர்த்து இந்த ஆண்டில் சிங்கப்பூரில் பதிவான கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை ஏழு.
குறிப்பாக, ஆறு வாரங்களில் நிகழ்ந்த மூன்றாவது கொலைச் சம்பவம் அது.

