மோசடிக்காரர்கள் விரித்த வலையில் சிக்கியதற்கான ஆதாரங்கள் இருந்தும் மோசடியால் பாதிக்கப்படவில்லை என்று பிடிவாதமாக இருப்போரின் வங்கிக் கணக்குகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் காவல்துறைக்கு வழங்கப்படுகிறது.
மோசடிகளிடமிருந்து பாதுகாக்கும் சட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) முதல் நடப்புக்கு வருகிறது.
இந்த அணுகுமுறையின்கீழ் வங்கிகளுக்கு தடை உத்தரவைக் காவல்துறை பிறப்பிக்கலாம்.
அவ்வாறு செய்யப்படும் வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் கட்டுப்படுத்தப்படும்.
இந்தச் சட்டம் ஜனவரி மாதம் 7ஆம் தேதியன்று நிறைவேற்றப்பட்டது.
வங்கி அட்டை, கடன் சேவைகள் ஆகியவை மூலம் பிறரது வங்கிக் கணக்கிற்கு பணம் மாற்றப்படுவதைத் தடுக்கலாம்.
வங்கிகளுக்கு நேரில் என்று பணத்தை வெளியே எடுப்பதையும் கட்டுப்படுத்த முடியும்.
தடை உத்தரவு விதிக்கப்பட்டோர், சட்டத்துக்கு உட்பட்ட காரியங்களுக்குத் தங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைப் பயன்படுத்தலாம்.
தொடர்புடைய செய்திகள்
கட்டணங்கள் செலுத்துவது, மளிகைப் பொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை வாங்குவது போன்றவை அதில் அடங்கும். மோசடிக்காரர்களிடம் பணம் கைமாறும் அபாயம் உள்ளது என்று சந்தேகம் எழுந்தால் தடை உத்தரவு விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சு திங்கட்கிழமை (ஜூன் 30) தெரிவித்தது.
மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளதைச் சிலருக்குப் புரியவைப்பதே பெரும் சவாலாக இருப்பதாகக் காவல்துறை கூறியது.
மோசடிகளிலிருந்து பாதுகாக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாவிடில் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைக் காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாது.
வேறு வழியில்லாமல் போகும் நிலையில் மட்டுமே தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது.
ஒவ்வொரு வழக்கின் சூழ்நிலைகளை நன்கு ஆராய்ந்த பிறகு, தடை உத்தரவு பிறப்பிப்பது குறித்து காவல்துறை அதிகாரி முடிவெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
தடை உத்தரவைப் பிறப்பிக்க முடிவெடுக்கப்பட்டடால் ஓசிபிசி வங்கி, டிபிஎஸ் வங்கி, யுஓபி, மேபேங்க், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், சிட்டிபேங்க், எச்எஸ்பிசி ஆகிய வங்கிகளுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படும்.
மற்ற வங்கிகளுக்கும் தடை உத்தரவு விதிக்கப்பலாம்.
தடை உத்தரவு ஒவ்வொரு முறையும் 30 நாள்கள் வரை செல்லுபடியாகும். அதை ஐந்து முறை நீட்டிக்கலாம். எனவே, தடை உத்தரவு ஆறு மாதங்கள் வரை நீடிக்கலாம்.
மோசடியால் பாதிக்கப்படும் அபாயம் இனி இல்லை என்று காவல்துறை கருதினால் 30 நாள் வரம்புக்கு முன்னதாகவே தடை உத்தரவைக் காவல்துறை ரத்து செய்யலாம்.
தடை உத்தரவுக்கு எதிராக காவல்துறை ஆணையரிடம் மேல்முறையீடு செய்யலாம். இந்த விவகாரம் குறித்து அவர் எடுக்கும் முடிவே இறுதியானது.
2024ஆம் ஆண்டில், சிங்கப்பூரில் மோசடிக் குற்றஙகளால் பாதிக்கப்பட்டோர் $1.1 பில்லியன் இழந்தனர். ஒரே ஆண்டில் இவ்வளவு பெரிய தொகை இழப்பு ஏற்பட்டது இதுவே முதல்முறை.