புக்கிட் தீமாவில் உள்ள செயிண்ட் ஜோசப் தேவாலயத்தில் இன்று காலை (டிசம்பர் 21) கண்டெடுக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருள் ஆபத்தில்லாதது என்றும் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
காலை 11.08 மணிக்கு வெளியிடப்பட்ட தகவலில், சிங்கப்பூர் ஆயுதப்படைகளின் ரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் வெடிபொருள் பாதுகாப்புக் குழு, அந்தப் பொருளை முழுமையாகச் சோதித்த பிறகு இந்த முடிவுக்கு வந்ததாக காவல்துறை கூறியது.
காவல்துறை நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன, மேலும் மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் அந்த இடத்தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முன்னதாக அந்த தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
எண் 620 அப்பர் புக்கிட் தீமா சம்பவம் குறித்து 7.10 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை தமது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருந்தது.
சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்றுள்ளதாகவும் அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் காவல்துறை கூறியது
ஸ்ட்ரெய்ட்ஸ் செய்தியாளர்கள், காலை 9.00 மணியளவில் அங்கு சென்றபோது யாரும் தேவாலயத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
தேவாலயத்திற்கு அருகிலுள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில், தேவாலய தொண்டூழியர்கள் காணப்பட்டனர். பிரார்த்தனை ரத்து செய்யப்பட்டதாக அங்கு வந்தவர்களுக்கு அவர்கள் தெரியப்படுத்தினர்.
புக்கிட் பாத்தோக்கில் உள்ள செயிண்ட் மேரிஸ் ஆஃப் தி ஏஞ்சல்ஸ் தேவாலயத்திற்கு கூட்டத்தினரை தொண்டூழியர்கள் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தனர்.
காலை 9.17 மணிக்கு, காவல்துறையின் கே-9 மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் வாகனங்கள் தேவாலய வளாகத்திற்குள் நுழைந்தன.
இந்நிலையில் தேவாலய உறுப்பினர்களுக்கு இடையே பகிரப்பட்ட செய்தியை ஸ்ட்ரெய்ட்ஸ் செய்தியாளர்களும் அறிந்துகொண்டனர். அதில், தேவாலயத்தின் பின்புறத்தில் ஒரு சந்தேகத்திற்கிடமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதனைச் சுற்றி தடுப்புகள் போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

