காவல்துறை ஆணையாளரான 62 வயது ஹூங் வீ டெக், 38 ஆண்டுகள் சிங்கப்பூர் காவல்துறையில் பணியாற்றிய பின்னர் 2026ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி பதவி ஓய்வு பெறுகிறார். அதில் 10 ஆண்டுகள் காவல்துறையின் தலைமை பொறுப்பில் அவர் இருந்தார்.
திரு ஹூங், தமது பதவியை, தற்போது சிங்கப்பூர் காவல்துறையின் துணை ஆணையாளர் (கொள்கை) பொறுப்பில் உள்ள 46 வயது திரு ஹாவ் குவாங் ஹுவீயிடம் ஒப்படைப்பார் என்று அக்டோபர் 6ஆம் தேதி வெளியிடப்பட்ட உள்துறை அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.
திரு ஹூங் ஜனவரி 6, 2015 அன்று ஆணையாளராக நியமிக்கப்பட்டார். தமது பணிக்காலத்தின் தொடக்கத்தில், அவர் காவல்துறையின் உளவுப் பிரிவு இயக்குநர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்தார்.
திரு ஹாவ்வை எடுத்துக்கொண்டால், விசாரணைத் திறன்களை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்வது மற்றும் குற்றத் தடுப்பு, கண்டறிதல் உட்பட காவல்துறையில் தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார் என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.