சாலையில் சென்றுகொண்டு இருந்த தனது பேருந்தை கார் ஒன்று கண்மூடித்தனமாக இடைமறித்தது குறித்து எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) பிற்பகலில் அந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக தனது புகாரில் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பேருந்து எண் 51 சென்றுகொண்டு இருந்தபோது கார் ஒன்று திடீரென்று அந்தப் பேருந்தின் முன்னாள் சென்று ‘பிரேக்’ போட்டதோடு பேருந்து செல்லும் வழியை மறித்து அது நிறுத்தப்பட்டதாகவும் எஸ்பிஎஸ் டிரான்சிட் கூறியது.
“பேருந்தின் முன்னால் சென்ற கார் மீண்டும் மீண்டும் ‘பிரேக்’ போட்டு நிற்பதும் மெதுவாகச் செல்வதுமாக இருந்தது. அந்த காரின் முன்னால் வாகனம் எதுவும் காணப்படாதபோதும் அந்த கார் அவ்வாறு செலுத்தப்பட்டது,” என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் பேச்சாளர் திருவாட்டி கிரேஸ் வூ திங்கட்கிழமை (ஜனவரி 26) தெரிவித்தார்.
சாலையைப் பயன்படுத்துவோர் மற்றும் பேருந்துப் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் விதத்தில் காரின் ஓட்டுநர் நடந்துகொண்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில் திருவாட்டி வூ கூறினார்.
அந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி வெள்ளிக்கிழமை பிற்பகலில் டிக்டாக் தளத்தில் பதிவேற்றப்பட்டது. மூன்று நாள்களில் 188,000க்கும் மேற்பட்டோர் அந்தக் காணொளியைப் பார்த்துள்ளனர்.
ஐந்து தடங்களைக் கொண்ட கேலாங் ரோட்டில் நான்காவது தடத்தில் சென்றுகொண்டு இருந்த பேருந்தின் முன்னால் கார் ஒன்று மெதுவாகச் சென்றதை அந்தக் காணொளி காட்டியது.
அந்த கார் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது என்று பேருந்து ஓட்டுநர் கூறியதும் காணொளியில் பதிவாகி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பேருந்து நிறுத்தத்தின் 9 மீட்டர் தூரத்திற்குள் காரை நிறுத்துவது குற்றம் என்று நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ஒன் மோட்டோரிங் இணையத்தளம் தெரிவிக்கிறது.
அத்துடன், திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 7.30 மணிக்கும் 9.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலும் மாலை 5 மணிக்கும் இரவு 8 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலும் பேருந்து தடத்தில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
பேருந்தின் பாதையில் கார் குறுக்கிட்டது எந்த நேரம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

