புத்தாண்டை வரவேற்கும் கொண்டாட்டங்களை முன்னிட்டு, மரினா பேயிலும் சிங்கப்பூர் விளையாட்டு நடுவத்திலும் ஏறக்குறைய 500,000 பேர் திரள்வர் என எதிர்பார்க்கப்படுவதால், கூட்டத்தைச் சமாளிக்க ஆளில்லா வானூர்திகளையும் செயற்கை நுண்ணறிவையும் காவல்துறை பயன்படுத்தும்.
புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது பாதுகாப்பை உறுதிசெய்ய தனது திட்டங்களை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) பகிர்ந்த காவல்துறை, 800க்கும் அதிகமான அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று தெரிவித்தது.
சிறப்புச் செயல்பாட்டுத் தளபத்தியம், பாதுகாப்புக் காவல் தளபத்தியம், பொதுப் போக்குவரத்துக் காவல் தளபத்தியம், கடலோரக் காவல் படை, போக்குவரத்துக் காவல்துறை, அவசர நடவடிக்கைக் குழுக்கள் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளும் அவர்களில் அடங்குவர்.
துணைக் காவல்துறை அதிகாரிகளும் பாதுகாவல் அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
எஸ்பிளனேட் பார்க், எஸ்பிளனேட் வாட்டர்ஃபிரண்ட் புரோமனாட், மரினா பே சேண்ட்ஸ் வாட்டர்ஃபிரண்ட் புரோமனாட், தி புரோமோண்டரி, ஒன் புல்லர்டன்/மெர்லயன் பூங்கா, ஸ்டேடியம் ரோர், நீர் விளையாட்டு நிலையம் ஆகிய இடங்களில் கூட்டத்தை அதிகாரிகளில் சிலர் சமாளிப்பர் என்று காவல்துறை தெரிவித்தது.
மத்தியப் காவல்பிரிவுத் தலைவரான துணை உதவி ஆணையர் வோங் கெங் ஹோ, “இந்த நிகழ்வின்போது பயண நேரத்தில் தாமதம் ஏற்படுவது, கூட்டம் நிறைந்த எம்ஆர்டி நிலையங்களில் ரயில்கள் நிற்காமல் செல்வது, கூட்டம் நிறைந்து வழிவதைத் தவிர்க்க நீர்முகப்புப் பகுதிகள் மூடப்படுவது ஆகியவற்றை நாம் எதிர்பார்க்கலாம்,” என்றார்.
கூட்டத்தின் அளவு கூடும்போது அதைக் கட்டுப்படுத்த, மரினா பேயையும் காலாங் பேசினையும் சுற்றியுள்ள எம்ஆர்டி நிலையங்களின் சில நுழைவாயில்களும் வெளிவாயில்களும் மூடப்படும். மேலும், கூட்டத்தைப் பிரித்துவிட பேஃபிரண்ட், ஸ்டேடியம் எம்ஆர்டி நிலையங்களில் ரயில்கள் நிற்காமல் செல்லலாம்.
கடந்த ஆண்டுகளைப் போலவே, கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவ அதிகாரிகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவர் என்று துணை உதவி ஆணையர் வோங் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“ஆளில்லா வானூர்திகள், நேரடிக் கண்காணிப்புக் கருவிகள், திசை வழிகாட்டிகள் ஆகியவற்றை நாங்கள் பயன்படுத்துவோம். இவை எங்களுக்குப் பயனுள்ளவையாக இருந்துள்ளன,” என்றார் அவர்.
செயற்கை நுண்ணறிவு காணொளிப் பகுப்பாய்வுக் கருவியான Q-Crowd Counter-ஐ பயன்படுத்த உள்துறைக்குழு அறிவியல், தொழில்நுட்ப அமைப்புடன் சேர்ந்தும் காவல்துறை பணியாற்றி வருகிறது.
வானூர்திகளிடமிருந்து நேரடிக் காட்சிகளைப் பெறும் இந்தக் கருவி, காவல்துறை அதிகாரிகளுக்கு கூட்டம் தொடர்பான நிகழ்நேர தகவல்களை வழங்குகிறது.

