தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இணையத்திலும் சமூகம் சார்ந்த சட்ட அமலாக்கம்: சுன் ஷுவெலிங்

2 mins read
e7ef3ad4-cf42-4231-a304-dbbb076150e3
உள்துறைத் துணை அமைச்சர் சுன் ஷுவெலிங், சமூகம் சார்ந்த சட்ட அமலாக்க உலகக் கருத்தரங்கில் ஆகஸ்ட் 21ஆம் தேதி உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாதுகாப்பு குறித்த கண்ணோட்டத்தை அதிகரிப்பது, குற்றச்செயல் விகிதங்களைக் குறைப்பது, சட்ட அமலாக்கத்தில் பொது நம்பிக்கையை மேம்படுத்துவது ஆகியவற்றில் சமூகம் சார்ந்த சட்ட அமலாக்கம் பயன் அளித்திருப்பது நிரூபணமாகி உள்ளது.

இருப்பினும், அது காலத்திற்கு ஏற்ப இணையத்திலும் மேற்கொள்ளப்படவேண்டும்.

இணையக் குற்றங்கள், மோசடிகள் போன்ற பிரச்சினைகளைக் கையாள்வதற்கு, பொதுமக்களின் உதவி நாடப்படும் சில சமூகம் சார்ந்த சட்ட அமலாக்கத் திட்டங்களை சிங்கப்பூர் காவல்துறை தொடங்கியிருப்பதாக உள்துறைத் துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் கூறினார்.

புதிய ‘சைபர் கார்டியன்ஸ் ஆன் வாட்ச்’ திட்டமும் அவற்றில் அடங்கும். ஜூலை மாத நிலவரப்படி, அதில் 12,000க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.

இணையத்தில் உத்தேசக் குற்றச் செயல்களைக் கண்டுபிடித்து, காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கவோ, மின்னிலக்கத் தளங்களில் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் குறித்து புகார் அளிக்கவோ, தொண்டூழியர்கள் சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுகின்றனர்.

“நமது இணையத்தைப் பாதுகாக்க, ‘சைபர் கார்டியன்ஸ் ஆன் வாட்ச்’ உறுப்பினர்கள் வாழ்க்கையின் வெவ்வேறு பிண்ணனிகளிலிருந்து வருகின்றனர்,” என்றார் திருவாட்டி சுன்.

“உறுப்பினர்களுக்குக் காவல்துறையிடமிருந்து இணையக் குற்றம் தொடர்பான தகவல்கள், எச்சரிக்கைகள், ஆலோசனைகள் கிடைக்கும். அத்தகைய தகவல்களை அவர்கள் தங்கள் குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ள உதவலாம்,” என்று அவர் கூறினார்.

திருவாட்டி சுன், ஆகஸ்ட் 21ஆம் தேதி சமூகம் சார்ந்த சட்ட அமலாக்க உலகக் கருத்தரங்கில் உரையாற்றினார்.

‘அமாரா சிங்கப்பூரில்’ முதல்முறையாக நடைபெறும் அந்தக் கருத்தரங்கிற்கு, சிங்கப்பூர் காவல்துறையின் சமூகப் பங்காளித்துவத் துறை ஏற்பாடு செய்தது.

அதில் அனைத்துலகக் காவற்படைகள், உள்ளூர் அரசாங்க அமைப்புகள், தனியார் துறைகள் ஆகியவற்றைச் சேர்ந்த 200 பேர் கலந்துகொள்கின்றனர்.

ருவாண்டா, நெதர்லாந்து, ஹாங்காங், அமெரிக்கா ஆகியவற்றைச் சேர்ந்த காவற்படைகளின் அதிகாரிகள் அவர்களில் அடங்குவர்.

கருத்தரங்கு ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல், மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது.

சமூகம் சார்ந்த சட்ட அமலாக்கம், 1980களிலிருந்து சிங்கப்பூரின் சட்ட அமலாக்க அணுகுமுறையின் முக்கிய அங்கமாக இருந்துவந்துள்ளதாகத் திருவாட்டி சுன் குறிப்பிட்டார்.

ஜப்பானின் ‘கோபான்’ முறையைப் பின்பற்றி, சிங்கப்பூர் 1983ல் அக்கம்பக்கக் காவல்நிலையத்தை அறிமுகம் செய்தது.

சமூகம் சார்ந்த சட்ட அமலாக்கம் பயங்கரவாத மிரட்டலையும் தாக்குதலுக்குப் பிந்திய நிலைமையையும் சமாளிப்பதில் முக்கியப் பங்காற்றலாம் என்று திருவாட்டி சுன் கூறினார்.

சிங்கப்பூர் 2016ஆம் ஆண்டில் எஸ்ஜி பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கியதை அவர் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்