மின்னஞ்சல் மோசடி மூலம் பறிபோன $175,560 மீட்பு

2 mins read
சிங்கப்பூர் காவல்துறை, இன்டர்போல், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் கூட்டு நடவடிக்கை
c67695f1-0bda-4d03-a1b1-c9870c8be89c
சிங்கப்பூர் காவல்துறையின் மோசடி ஒழிப்புப் பிரிவு ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அதிகாரிகளுக்கும் இன்டர்போலுக்கும் தகவல் அளித்ததை அடுத்து ஆகஸ்ட் 6 ஆம் தேதி மோசடி முயற்சி தடுக்கப்பட்டது. - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூர் காவல்துறை, ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அதிகாரிகளுடனும் ‘இன்டர்போல்’ அனைத்துலகக் குற்றவியல் காவல்துறை அமைப்புடனும் இணைந்து மின்னஞ்சல் மோசடியில் பறிபோன கிட்டத்தட்ட 175,560 வெள்ளியை மீட்டுள்ளது.

முன்னதாக, சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட விமானப் போக்குவரத்து நிறுவனம் ஒன்று, மின்னஞ்சல் மோசடியில் கிட்டத்தட்ட 132,500 அமெரிக்க டாலரை இழந்தது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி, அமெரிக்க விநியோகிப்பாளர் என்ற போர்வையில் மோசடிக்காரர் அந்நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

ஏற்கெனவே வாங்கிய பொருள்களுக்கு, ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் இருக்கும் வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பும்படி அந்த மின்னஞ்சல் கேட்டுக்கொண்டது.

உண்மையான மின்னஞ்சல் முகவரியில் இடம்பெற்ற ஆங்கில எழுத்தான ‘i’ மோசடிக்காரரின் மின்னஞ்சலில் ‘I’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை உணராத நிறுவன ஊழியர் ஆகஸ்ட் 2ஆம் தேதி மோசடிக்காரர் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு 132,500 அமெரிக்க டாலரை அனுப்பினார்.

அதுகுறித்து உண்மையான விநியோகிப்பாளருக்குத் தகவல் தந்த பிறகே மோசடி குறித்து அவருக்குத் தெரியவந்தது.

ஆகஸ்ட் 3ஆம் தேதி, நிறுவனம் காவல்துறையிடம் புகாரளித்தது.

சிங்கப்பூர் காவல்துறையின் மோசடி ஒழிப்புப் பிரிவு ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அதிகாரிகளுக்கும் இன்டர்போலுக்கும் தகவல் அளித்தனர். ஆகஸ்ட் 6ஆம் தேதி மோசடித் திட்டம் முறியடிக்கப்பட்ட பணம் மீட்கப்பட்டது என்று சிங்கப்பூர் காவல்துறை கூறியது.

ஜூலை மாதத்திலும் இதே முறையைப் பயன்படுத்தி ஏறக்குறைய $53 மில்லியன் மோசடி செய்யப்பட்டது. திமோர் லெஸ்டே அதிகாரிகளுடனும் இன்டர்போலுடனும் இணைந்து சிங்கப்பூர் காவல்துறை அதிகாரிகள் அதை மீட்டனர் என்பது நினைவுகூரத் தக்கது.

குறிப்புச் சொற்கள்