முடிக்கப்படாத புதுப்பிப்புப் பணிகள், காணாமற்போன அறைகலன்கள், வழங்கப்படாத சம்பளம், மத்திய சேம நிதிப் பங்களிப்புகள் ஆகியவற்றின் தொடர்பான புகார்களை அடுத்து, ‘ஏக்சியோன் டிசைன்’ என்ற உட்புற வடிவமைப்பு நிறுவனத்திடம் காவல்துறையும் அரசாங்க அமைப்புகளும் விசாரணை நடத்தி வருகின்றன.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் சிலருக்கு பல்லாயிரக்கணக்கான வெள்ளி கிடைக்க வேண்டியுள்ளது.
இவ்வாண்டின் தொடக்கத்தில் நிறுவனத்திடம் அனுப்பிய செய்திகளுக்கு எந்தப் பதிலும் வராததால், புதுப்பிப்புப் பணிகள் பாதியிலேயே நின்ற வீடுகளில் வசிக்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதாகச் சிலர் கூறினர்.
புகார்கள் பெறப்பட்டதை உறுதிப்படுத்திய காவல்துறை, அது குறித்து விசாரணை தொடர்வதாகத் தெரிவித்தது.
முன்னாள் ஊழியர்கள் பலர் சம்பளங்கள், மத்திய சேம நிதிப் பங்களிப்புகள் வழங்கப்படாதது குறித்து புகார் அளித்துள்ளதாகவும் மனிதவள அமைச்சு, மத்திய சேம நிதிக் கழகம், சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணி ஆகியவை தெரிவித்துள்ளன.
இந்நிலையில், நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் ஐவர் தங்களுக்கான நிலுவைத் தொகையைப் பெற்றுக்கொள்ள, சம்பள அட்டவணைக்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.
மத்திய சேம நிதிக் கழகம் அந்த நிறுவனத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. அத்துடன், வேலை நியமனச் சட்டத்தை மீறியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அந்நிறுவனத்திடம் மனிதவள அமைச்சும் விசாரணை நடத்தி வருகிறது.
நிறுவனத்தின் இணை நிறுவனராக வாடிக்கையாளர்களிடம் தம்மை அறிமுகப்படுத்திய ஜான் டான் என்பவர், நிறுவனம் நொடித்துப்போய்விட்டதாகவும் எஞ்சிய பணிகளை முடிக்கவோ வாடிக்கையாளர்களுக்குப் பணத்தைத் திரும்பக் கொடுக்கவோ தம்மிடம் போதிய பணமும் ஆட்களும் இல்லை என்று சிஎன்ஏ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
தம் ஊழியர்களுக்கு இன்னும் ஏறக்குறைய 10,000 வெள்ளி சம்பளம் கொடுக்கவேண்டியிருப்பதாகவும் அவர் சொன்னார்.
ஊழியர்களின் சம்பளத்தைத் தவணை முறையில் திருப்பிச் செலுத்த, தாமும் இணை நிறுவனர் ஆல்வின் ஓங்கும் மனிதவள அமைச்சுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
வாடிக்கையாளர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதைவிட, ஊழியர்களின் சம்பளத்தைத் திருப்பிச் செலுத்துவதற்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் கூறினார்.

