உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சிலர் பள்ளிச் சிறுவனை கேலி செய்து உதைக்கும் சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.
புக்கிட் வியூ உயர்நிலைப் பள்ளிச் சீருடையில் காணப்பட்ட பதின்ம வயதினர் அச்சிறுவனைத் தாக்கும் காணொளி ஒன்று செப்டம்பர் 15ஆம் தேதி டிக்டாக் ஊடகத்தில் பரவியது.
குறைந்தபட்சம் ஐவரைக் கொண்ட உயர்நிலைப் பள்ளி மாணவர் குழு, வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கின் கீழ்த்தளத்தில் சிறுவனைப் பார்த்து கிண்டலாகச் சிரிப்பதும் பின்னாலிருந்து உதைத்ததால் சிறுவன் கீழே விழுவதும் அந்தக் காணொளியில் இடம்பெற்று இருந்தன.
உதைத்துத் தள்ளிவிடப்பட்டதால் வேதனையில் சிறுவன் அழுவதையும் சுற்றி நின்றிருந்த மாணவர்கள் கேலியாக அழுவதையும் அதில் காண முடிந்தது.
பதிவேற்றப்பட்ட காணொளியை திங்கட்கிழமை (செப்டம்பர் 16) காலை 11 மணி வரை 600,000 பேர் பார்த்தனர்.
புக்கிட் வியூ உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜஸ்வந்த் சிங்கைத் தொடர்புகொண்டு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்டபோது, அந்தச் சம்பவம் 2023 அக்டோபரில் பள்ளி வளாகத்திற்கு வெளியே நடந்ததாகவும் அது குறித்து பள்ளிக்கு எந்தப் புகாரும் வரவில்லை என்றும் கூறினார்.
காணொளி வெளியானதும், பாதிக்கப்பட்ட மாணவரை பள்ளி தொடர்புகொண்டதாகவும் காயம் குறித்து அவர் புகார் தெரிவிக்கவில்லை என்றும் திரு சிங் தெரிவித்தார்.
இருப்பினும், அந்த மாணவரின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் தெரிவித்ததாக அவர் கூறினார். புகார் வந்ததை உறுதிப்படுத்திய காவல்துறை விசாரணை நடந்து வருவதாகத் தெரிவித்தது.