தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோசடிகளை எதிர்கொள்ள மெட்டாவுக்கு முதல் இணையத் தீங்கு உத்தரவு பிறப்பிக்கும் காவல்துறை

2 mins read
இணங்காவிட்டால் $1 மில்லியன் வரை அபராதம்
a815118e-d621-4fe1-939f-14b884976080
புதன்கிழமை (செப்டம்பர் 3) நடைபெற்ற ‘உலகளாவிய மோசடித் தடுப்பு உச்சநிலை மாநாடு ஆசியா 2025’ நிகழ்ச்சியில் உரையாற்றும் உள்துறை துணை அமைச்சர் கோ பெய் மிங். - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரில் அதிகரித்துவரும் இணைய மோசடிகளை எதிர்கொள்ள, ஓர் இணையத்தள சேவை நிறுவனத்திற்குக் காவல்துறை முதல்முறையாக உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.

மோசடிகளை, குறிப்பாக அரசாங்க அதிகாரிகளைப்போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், ஃபேஸ்புக்கை நடத்தும் தொழில்நுட்ப நிறுவனமான மெட்டாவுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

இந்த உத்தரவின்படி, முக்கிய அரசாங்கப் பதவி வகிப்போரின் பெயரில் ஃபேஸ்புக்கில் உருவாக்கப்படும் போலி விளம்பரங்கள், கணக்குகள், சுயவிவரங்கள், வர்த்தகப் பக்கங்கள் ஆகியவற்றைத் தடுக்கும் நடவடிக்கைகளை மெட்டா நிறுவனம் மேற்கொள்ள வேண்டும்.

இந்த உத்தரவை மெட்டா பின்பற்றத் தவறினால், அந்நிறுவனத்திற்கு $1 மில்லியன் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

இணையவழி குற்றவியல் தீங்குச் சட்டம் 2024 பிப்ரவரியில் நடப்புக்கு வந்ததிலிருந்து, சிங்கப்பூரில் ஓர் இணையச் சேவை நிறுவனத்திற்குப் பிறப்பிக்கப்படும் முதல் கட்டாய உத்தரவு இதுவே.

புதன்கிழமை (செப்டம்பர் 3) நடைபெற்ற ‘உலகளாவிய மோசடித் தடுப்பு உச்சநிலை மாநாடு ஆசியா 2025’ நிகழ்ச்சியில் உள்துறை துணை அமைச்சர் கோ பெய் மிங் உரையாற்றியபோது இதனை அறிவித்தார்.

அரசாங்க அதிகாரிகளைப்போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிகள் அதிகரித்திருப்பதைச் சுட்டிய திரு கோ, இத்தகைய மோசடிகளுக்கு ஃபேஸ்புக் முக்கியத் தளமாகப் பயன்படுத்தப்படுவதால், இந்தக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறினார்.

“இந்த மோசடிகளைக் கட்டுப்படுத்த மேலும் உறுதியான நடவடிக்கை தேவை என்று காவல்துறை மதிப்பிட்டுள்ளது,” என்றார் அவர்.

இத்தகைய ஆள்மாறாட்ட மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் வலுப்படுத்தி வருவதாகவும் இந்த மோசடிகளைக் களைய மெட்டாவுடன் தொடர்ந்து அது அணுக்கமாகச் செயல்படவுள்ளதாகவும் திரு கோ சொன்னார்.

முன்னதாக, தமது உரையில் அவர், “சிங்கப்பூரைப் பொறுத்தவரை, மோசடிகளுக்கு எதிரான போர் ஒரு முக்கிய தேசிய முன்னுரிமையாக உள்ளது. சிங்கப்பூர், மோசடிக்காரர்களுக்கு ஒரு கவர்ச்சியான இலக்காக உள்ளது. இத்தகைய மோசமான அச்சுறுத்தலைக் கையாள, முழுச் சமூகத்தின் பங்களிப்பும் தேவைப்படும்,” என்று கூறியிருந்தார்.

இதற்கு நான்கு நடவடிக்கைகள் தேவை என்று திரு கோ விளக்கினார். மோசடிகளை முன்கூட்டியே தடுத்தல், மோசடிகளைப் புகாரளித்து அவற்றைக் கண்டறிவதை ஊக்குவித்தல், மோசடிக்காரர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்தல் மற்றும் மோசடிப் பணத்தை மீட்பது, பொதுமக்களுக்குக் கல்வி புகட்டுவது ஆகியன அவை.

குறிப்புச் சொற்கள்