மதுபோதையில் வாகனம் ஓட்டி, விபத்து ஏற்படுத்தி காரை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிச் சென்ற காவல்துறை உதவி கண்காணிப்பாளருக்குச் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.
53 வயது பெர்னட் டான் பீ சென், பல போக்குவரத்துக் குற்றங்களைப் புரிந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.
கவனக்குறைவுடன் கார் ஓட்டியது, வேக வரம்பை மீறி கார் ஓட்டியது முதலியவை அவற்றில் அடங்கும்.
இந்நிலையில், 2023ஆம் ஆண்டில் அவர் மதுபோதையில் கார் ஓட்டி, மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.
அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிய பெண்ணுக்கு உதவி செய்யாமல் அவ்விடத்திலிருந்து டான் காரை ஓட்டிச் சென்றார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டன.
விசாரணை மூலம் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் டான்னை அடையாளம் கண்டனர்.
டான் தமது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அனுமதிக்கப்பட்ட அளவைவிட அவரது ரத்தத்தில் அதிக ஆல்கஹால் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
டான் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 15) அவருக்கு ஓராண்டு, இரண்டு மாதங்கள் சிறையும் $6,000 அபராதமும் விதிக்கப்பட்டன.
அதுமட்டுமின்றி, சிறையிலிருந்து விடுவிக்கப்படும் தேதியிலிருந்து ஏழு ஆண்டுகளுக்கு அவர் அனைத்து வகை வாகனங்களை ஓட்டக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.