காவல்துறையும் சிங்கப்பூரின் ஐந்து வங்கிகளும் இணைந்து செயல்பட்டதன் பலனாக செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 31 வரை 1,338 மோசடிச் சம்பவங்கள் தடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அந்த மோசடிகள் மூலம் பொதுமக்களின் $53 மில்லியனுக்கும் அதிகமான பணம் காப்பாற்றப்பட்டதாகவும் காவல்துறை வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) தெரிவித்தது.
காவல்துறையின் ‘ஏஎஸ்சி’ (ASC) எனப்படும் மோசடிக்கு எதிரான மையத்துடன் டிபிஎஸ் வங்கி, எச்எஸ்பிசி வங்கி, ஓசிபிசி வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, யுஓபி வங்கி ஆகியன கைகோத்து மோசடி முறியடிப்பு நடவடிக்கைகளில் இறங்கின.
வேலை மோசடிகள், முதலீட்டு மோசடிகள், இணைய வர்த்தக மோசடிகள், போலி தோழமை அழைப்பு மோசடிகள் ஆகியன நிகழாமல் அந்த வங்கிகள் முறியடித்துள்ளன.
மோசடிக்காரர்களின் சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகள் பற்றி 6,700 வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏஎஸ்சியும் ஐந்து வங்கிகளும் 9,000க்கும் மேற்பட்ட குறுந்தகவல்களை அனுப்பி விழிப்பூட்டின.
அதிகமான பரிவர்த்தனைகளில் ஈடுபட வேண்டாம் என அந்தக் குறுந்தகவல்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அறிவுறுத்தின.
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு 45,563 மோசடிச் சம்பவங்கள் பதிவாயின.