வாசனைத் திரவியம் சந்தா சேவை தொடர்பில் புகார்கள்; காவல்துறை விசாரணை

வாசனைத் திரவியம் சந்தா சேவை தொடர்பில் புகார்கள்; காவல்துறை விசாரணை

2 mins read
30b2b5a7-4d22-4b07-9f2b-ca7fff087996
இணையவழி ஆடம்பர வாசனைத் திரவிய சேவை வழங்கும் ‘இவ்ரா’ நிறுவனம். - படம்: இவ்ரா

இணையத்தில் ‘இவ்ரா’ எனும் ஆடம்பரவகை வாசனைத் திரவியத்துக்கான சந்தா சேவை தொடர்பில் வாடிக்கையாளர்கள் புகார் அளித்துள்ளதை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கட்டணம் தவறாக விதிக்கப்பட்டது தொடர்பிலும் கோரிய பொருள் கிடைக்காதது தொடர்பிலும் வாடிக்கையாளர்கள் புகார் அளித்திருந்தனர்.

வாசனைத் திரவியங்களை அதிகம் விரும்பி நாடும் ஸ்ரீமாலா பாலகிருஷ்ணன், தனது சந்தா சேவையை ரத்து செய்த பிறகும் அவரின் பற்று அட்டையில் $494.50 கட்டணம் விதிக்கப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

பிரெஞ்சு மொழியில் ‘இவ்ரா’ என்பது ‘மயக்கம்’ எனப் பொருள்படும். இந்தப் பெயர் கொண்ட நிறுவனத்தின் விளம்பரத்தை 41 வயது தாதியான ஸ்ரீமாலா, சமூக ஊடகங்களில் மே மாதம் பார்த்துவிட்டு நிறுவனம் வழங்கிய சலுகைகளால் ஈர்க்கப்பட்டார்.

அதனால், மாதந்தோறும் $44.95 பிரிமியம் சந்தா திட்டத்துக்கு அவர் பதிந்துகொண்டார். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் அவருக்கு மூன்று மாதிரி வடிவ வாசனைத் திரவிய போத்தல்கள் கிடைக்கும்.

‘இவ்ரா’ நிறுவனம் இதற்கென ஆடம்பர வகை வாசனைத் திரவியங்களைத் தெரிவுசெய்து 8 மில்லிலிட்டர் போத்தல்களில் அனுப்பும்.

இருப்பினும், தான் விலை உயர்ந்த வாசனையைத் தெரிவு செய்யும்போதெல்லாம் அது இருப்பில் இல்லை என்று நிறுவனம் கூறிவிடுவதையும் வேறுவழியின்றி விலை மலிவான வாசனையையே தேர்ந்தெடுக்க வேண்டியதையும் ஸ்ரீமாலா பின்னாளில் கவனிக்கத் தொடங்கினார்.

ஆடம்பர வாசனைத் திரவியங்களை நிறுவனம் பயன்படுத்துவது குறித்தும் அவருக்குச் சந்தேகம் எழத் தொடங்கியது. பின்னர் அதைப் பிரபல வாசனைத் திரவிய வர்த்தகம் ஒன்றுடன் அவர் உறுதியும் செய்துகொண்டார்.

தனது மாதாந்தர கட்டணத்தைக் காட்டிலும் பன்மடங்காக சந்தா கட்டணம் தன் பற்று அட்டையில் கழிக்கப்பட்டதை அடுத்து நிறுவனத்திற்குத் தெரிவித்த அவர், இதுவரை தவறாகக் கழிக்கப்பட்ட அந்தத் தொகையை மீண்டும் பெறவில்லை.

இதற்கிடையே, ஸ்ரீமாலா போலவே வாடிக்கையாளர் பலருக்குக் கட்டணம் தவறுதலாகக் கழிக்கப்பட்டதுடன் கேட்ட பொருள் விநியோகிக்கப்படவில்லை.

முன்னதாக, நிறுவனம் மூடவுள்ளதாக டிசம்பர் 5ஆம் தேதியன்று ‘இவ்ரா’ அதன் இணையத்தளத்திலும் மின்னஞ்சல் வழியாகவும் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்