ஏறத்தாழ 4.2 மில்லியன் வெள்ளி இழப்பை ஏற்படுத்திய மோசடிகளில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 16 முதல் 93 வயதுக்குட்பட்ட 235 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நவம்பர் 5ஆம் தேதி முதல் 18ஆம் தேதிவரை தீவு முழுவதும் நடத்தப்பட்ட இரு வார அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, மோசடியாளர்களாகவோ பணக் கடத்தல்காரர்களாகவோ செயல்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 159 ஆண்களும் 76 பெண்களும் காவல்துறை விசாரணைக்கு உதவி வருகின்றனர். 536க்கும் மேற்பட்ட மோசடிச் சம்பவங்களில் இவர்களுக்குத் தொடர்பிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் காவல்துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
மின்வணிக மோசடிகள், ஆள்மாறாட்ட மோசடிகள், வேலை மோசடிகள், அரசாங்க அதிகாரி போல் நடித்து ஏமாற்றுதல் உள்ளிட்டவை இவற்றில் அடங்கும்.
ஏமாற்றுதல், கள்ளப்பணத்தை நல்ல பணமாக்குதல், உரிமமின்றிப் பணம் செலுத்தும் சேவைகளை வழங்குதல் ஆகிய குற்றங்களுக்காக இந்த 235 பேரிடமும் விசாரணை நடக்கிறது.
ஏமாற்றிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டுகள் வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம். கள்ளப்பணத்தை நல்ல பணமாக்கிய குற்றத்திற்குப் பத்தாண்டுகள் வரை சிறை, 500,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மோசடிப் பணத்தைக் கடத்துவதன் மூலமோ சிம் அட்டைகள், சிங்பாஸ் விவரங்களை வழங்குவதன் மூலமோ மோசடியாளர்களுக்கு உதவுவோருக்கு நீதிமன்ற விருப்பத்தின்பேரில் 12 பிரம்படிகள் வரை விதிக்கப்படலாம்.
மேலும், கூடுதல் மோசடிகளைத் தடுக்கும் நோக்கில் வசதிக் கட்டுப்பாட்டுச் சட்டகத்தின்கீழ், பணக் கடத்தல் குற்றங்களில் ஈடுபடுவோரின் வங்கிச் சேவைகள், கைப்பேசி இணைப்புகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று காவல்துறை தெரிவித்தது.
