இணைய வர்த்தக மோசடி குறித்து இசை ரசிகர்களுக்கு காவல்துறை நினைவூட்டு

1 mins read
a71b52b2-a0b3-4ee2-b4f8-07fa2298ba1c
பொருள்களை வாங்க ஆர்வம் காட்டியதும் முன்பணம் செலுத்துமாறு மோசடிக்காரர்கள் கூறுவார்கள். - படம்: காவல்துறை

சிங்கப்பூரின் கே-பாப் (கொரியன் பாப்) இசை ரசிகர்கள் இணைய மோசடிகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை வலியுறுத்தி உள்ளது.

அதிகாரபூர்வ இணைய வர்த்தகத் தளங்களில் இருந்து மட்டுமே கே-பாப் இசை தொடர்பான வர்த்தகப் பொருள்களை வாங்குமாறு அது ஆலோசனை தெரிவித்துள்ளது.

அல்லது சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நேரில் சென்று வாங்கலாம் என்றும் காவல்துறை யோசனை கூறியுள்ளது.

ஜி-டிராகன் போன்ற கலைஞர்கள் தொடர்பான கே-பாப் வர்த்தகப் பொருள்களை கேரோசல் போன்ற வர்த்தகத் தளங்களில் ஏற்கெனவே சிலர் ‘ஆர்டர்’ செய்திருப்பதைப் போன்ற பட்டியலைக் கண்டு ரசிகர்கள் மோசடியில் சிக்குவதாக அது தெரிவித்துள்ளது.

அத்தகைய பொருள்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவதாகத் தெரிவித்த உடன், பேநவ் அல்லது வங்கி வழியாகப் பணப்பரிமாற்றம் போன்றவை மூலம் முன்தொகையைக் கட்டுமாறு மோசடிக்காரர்கள் கேட்டுக்கொள்வர்.

பணம் செலுத்தியும் பொருள்கள் வராத நிலையில், விற்பனையாளரையும் தொடர்புகொள்ளாதபோதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை ரசிகர்கள் உணருவார்கள் என்றது காவல்துறை.

இதுபோன்ற மோசடிகளைத் தவிர்க்க, இணைய வர்த்தகத் தளங்கள் வாயிலாக வீட்டுக்கு வரவழைக்கும் பொருள்களுக்கு ரொக்கப் பணம் செலுத்தும் தெரிவைத் தேர்ந்து எடுக்குமாறு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

விரைவான பரிவர்த்தனை, அதிகமான விலைத் தள்ளுபடி போன்றவற்றை இணைய வர்த்தகத் தளங்களில் பார்த்து ஏமாற வேண்டாம் என்றும் அது கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்