சிங்கப்பூர்க் காவல்துறையின் தடயவியல் வல்லுநர்களும் விசாரணை அதிகாரிகளும் குற்றவியல் வழக்கு விசாரணைகளில் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா வானூர்திகள் (UAVs), முப்பரிமாண வருடிகள் போன்றவற்றின் மூலம் குற்றச்செயல்கள் நடந்த இடங்களின் துல்லியமான மாதிரி வடிவங்களை அவர்கள் உருவாக்குவதாகக் கூறப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை (ஜூன் 8), காவல்துறை நடத்திய ஊடக விளக்கக் காட்சியின்போது இத்தகைய கருவிகளைப் பயன்படுத்திச் சிக்கலான வழக்குகளில் எப்படித் தீர்வு காணப்படுகிறது என்பது குறித்தும் தடயவியல் வல்லுநர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் விதம் குறித்தும் விளக்கப்பட்டது.
முப்பரிமாண வருடிகளைப் பயன்படுத்துவதால் இத்தகைய மாதிரிகளை உருவாக்கும் நேரம் முக்கால்வாசி குறைவதாகக் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் டான் பூன் கொக் கூறினார்.
குற்றவியல் புலனாய்வுத் துறையின் சிறப்புப் புலன்விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பு வகிக்கும் அவர், முப்பரிமாண வருடிகள் மூலம் குற்றம் நடந்த இடத்தின் மெய்நிகர் வடிவத்தை உருவாக்க முடியும் என்றும் கூடுதல் குறிப்புகளுக்கு மீண்டும் அதை அணுக முடியும் என்றும் விளக்கினார்.
சாலை விபத்துகள் குறித்த விசாரணைகளிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. சம்பவ இடத்தின் மாதிரியைக்கொண்டு விசாரணை மேற்கொள்ள முடியும் என்பதால் போக்குவரத்தை விரைந்து சீராக்க முடியும்.
ஆளில்லா வானூர்திகளும் இப்போது பணியில் ஈடுபடுத்தப்படுவதால் சம்பவ இடத்தை வானிலிருந்து படமெடுப்பதும் சாத்தியமாகிறது.
உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்புடன் (HTX) இணைந்து புதிய கலப்பு மெய்ந்நிலைப் பயிற்சி முறை (Mixed Reality Training System) உருவாக்கப்பட்டுள்ளது. குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் ஆயுதங்கள் போன்ற ஆதாரங்களை நடைமுறை வாழ்க்கையில் காணப்படும் ஓர் இடத்தில் மெய்நிகர் முறையில் உருவாக்கி அதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பெரிய எண்ணிக்கையிலான ஆவணங்களையும் ஆதாரங்களையும் விரைவாக ஆய்வு செய்ய உதவும் என்று ஊடக விளக்கக் காட்சியில் எடுத்துரைக்கப்பட்டது.
இருப்பினும், விசாரணை நடத்தும் விதம், பரிவு, குற்றம் நடந்த இடத்தின் அடிப்படையிலான புரிதல், உத்திபூர்வ முடிவெடுத்தல் ஆகியவை மனித ஆய்வாளர்களின் கைகளிலேயே உள்ளன என்று வலியுறுத்தப்பட்டது.
விசாரணையாளர்களுக்கு முதற்கட்டமாக அடிப்படைப் பயிற்சி அளிக்கப்பட்டு, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தாமலே விசாரணை நடத்தும் முறையைக் கற்பித்த பிறகே மேம்பட்ட தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்த அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது.

