சார்ஜன்ட் யுவராஜா கோபாலின் உயிர்மாய்ப்பை அடுத்து, வேலையிடப் பாகுபாடு குறித்த குற்றச்சாட்டுகள் மறுஆய்வு செய்யப்படும் என்றும் அதன்பின் தன்னிச்சையான மறுஆய்விற்காக தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்திடம் அவ்வறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் காவல்துறை திங்கட்கிழமை தெரிவித்தது.
அங் மோ கியோ காவல்துறைப் பிரிவில் பணியாற்றி வந்த திரு யுவராஜா, ஈசூன் அவென்யூ 6, புளோக் 393ன் கீழே கடந்த வெள்ளிக்கிழமை மாலை மாண்டுகிடக்கக் காணப்பட்டார். வேலையிடத்தில் இனப் பாகுபாடு நிலவுவதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
திரு யுவராஜாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட இனப் பாகுபாட்டுக் குற்றச்சாட்டுகளையும் ஆராய்ந்த காவல்துறை, அவற்றில் உண்மையில்லை என்று கண்டறிந்தது.
வேலையிடத்தில் தனது உயரதிகாரிகள் தன்னைக் கிண்டல் செய்ததாகவும் சக ஊழியர்கள் இனத்தைப் பழித்துக் கூறியதாகவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் திரு யுவராஜா. அவற்றின் தொடர்பில் உதவி கோரியும் தனக்கு எந்த உதவியும் கிட்டவில்லை என்றும் அப்பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், திரு யுவராஜாவின் மரணம் தொடர்பில் வேறு எவர்மீதும் சந்தேகப்படாத காவல்துறை, அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்கவுள்ளதாகத் தெரிவித்தது.
கடந்த பல ஆண்டுகளாகவே உயரதிகாரிகள்மீதும் சக ஊழியர்கள்மீதும் திரு யுவராஜா பல புகார்களை முன்வைத்ததாகக் குறிப்பிட்ட காவல்துறை, வேலையிடத்தில் அவர் ‘குறிப்பிடத்தக்க சவால்களை’ எதிர்நோக்கி வந்ததாகவும் கூறியது.
திரு யுவராஜாவின் உயரதிகாரிகள் அவருக்குப் பல வழிகளில் உதவ முயன்றதாகவும் அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஒன்பது ஆண்டுகளில் ஆறு வெவ்வேறு பிரிவுகளுக்குப் பணிமாற்றம் செய்ததாகவும் காவல்துறை விளக்கியது.
கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து, அவரது வழக்கமான விடுப்பு உரிமையையும் தாண்டி, கூடுதல் விடுப்பும் வழங்கப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதுபோன்ற காரணங்களுக்காக, இவ்வாண்டில் அவர் 25 நாள்களுக்கும் குறைவாகவே பணியில் இருந்ததாகவும் காவல்துறை கூறியது.
கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து திரு யுவராஜாவிற்கு பலமுறை ஆலோசனையும் உளவியல் சார்ந்த உதவியும் வழங்கப்பட்டதாக அது தெரிவித்தது.
சக ஊழியர்களின் ஒழுங்கீன நடத்தை குறித்தும் திரு யுவராஜா தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
சென்ற 2021ஆம் ஆண்டில் காவல்துறை வளாகத்தினுள் அதிகாரிகள் மின்சிகரெட் புகைத்ததைக் கண்டதாகவும் ஆனால் உள்விசாரணை அதிகாரி அதனை மூடி மறைத்துவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஆனால், அவரது குற்றச்சாட்டிற்கு எந்தச் சான்றும் கிட்டவில்லை என்றும் அதனால் ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் காவல்துறை விளக்கமளித்தது.
இவ்வாண்டு ஜனவரியில் நடந்த இன்னொரு சம்பவத்தில், இன்னொரு காவல்துறைப் பிரிவில் பணியமர்த்தப்பட்ட திரு யுவராஜா, சக அதிகாரிகள் புகைபிடித்ததைக் கண்டதாகத் தனது உயரதிகாரிகளிடம் தெரிவித்தார்.
அவர் கூறியபடி, விசாரணையில் விதிமீறல் நடந்தது உண்மைதான் எனக் கண்டுபிடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள்மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டதைக் காவல்துறை சுட்டிக்காட்டியது.
இவ்விரு சம்பவங்களை அடுத்து, தான் புகாரளித்த சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவது அசௌகரியமாக இருப்பதாகக் கூறி, வேறிடத்திற்குப் பணிமாற்றம் செய்யும்படி திரு யுவராஜா கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோள் ஏற்கப்பட்டது.
குடும்பப் பிரச்சினை
குடும்பத்திலும் திரு யுவராஜாவிற்குப் பிரச்சினை இருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
இம்மாதம் 13ஆம் தேதி பிற்பகலில், திரு யுவராஜாவின் பெற்றோர் வீட்டிலிருந்து உதவிகோரி பலமுறை அழைப்பு வந்ததைக் காவல்துறை சுட்டியது.
அதனைத் தொடர்ந்து, காவல்துறை அங்கு சென்றபோது, பணம் தொடர்பில் திரு யுவராஜாவிற்கும் அவரது குடும்பத்திற்கும் கருத்து வேற்றுமை இருந்ததைக் காவல்துறை கண்டறிந்தது.
அதன் காரணமாக அவர் தன் சகோதரரையும் அடித்ததாகக் கூறப்பட்டது. அதனையடுத்து, வேண்டுமென்றே காயப்படுத்தியதாகவும் நோக்கத்துடன் துன்புறுத்தியதாகவும் அவர்மீது வழக்கு பதிந்து, காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.
மறுநாள் ஜூலை 14ஆம் தேதி, தனது பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்து, திரு யுவராஜாமீது அவருடைய தாயாரே காவல்துறையில் புகாரளித்தார்.
அதே நாளில், தன் வீட்டிற்கு வெளியே திரு யுவராஜா இருப்பதாகக் கூறி, அவருடைய அண்ணியும் காவல்துறையின் உதவியை நாடினார். காவல்துறை அங்கு சென்றதும் யுவராஜா அங்கிருந்து சென்றுவிட்டார்.
இந்தத் தகவல்களை எல்லாம் பொதுவில் வெளியிடப்போவது குறித்துத் திரு யுவராஜாவின் பெற்றோரிடமும் சகோதரர்களிடமும் காவல்துறை தெரிவித்தது. இதுகுறித்து அவர்களும் புரிந்துகொண்டதாகக் கூறப்பட்டது.
இவ்விவரங்கள் அடங்கிய அறிக்கை, தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்திற்கும் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகத்திடமும் வழங்கப்படும்.
இவ்விவகாரத்தில் மேலும் மறுஆய்வு தேவையா என்பது குறித்து அமைச்சர் சண்முகம் முடிவுசெய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
திரு யுவராஜா பத்தாண்டுகளுக்கும் மேலாகக் காவல்துறையில் சேவையாற்றியமைக்காகக் காவல்துறை அவருக்கும் அவருடைய குடும்பத்தினர்க்கும் நன்றி தெரிவித்துக்கொண்டது.
அவர்களுக்குத் தங்களது முழு உதவியை வழங்கிவருவதாகவும் காவல்துறை குறிப்பிட்டது.

