சிங்கப்பூர் காவல் துறையின் ‘மட்டா-வெர்ஸ்’ விளையாட்டு, 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டதிலிருந்து 4.4 மில்லியன் விளையாட்டாளர்களை ஈர்த்துள்ளது.
மக்களால் ‘தலைசிறந்த காவல்துறை அனுபவம்’ என்று கருதப்படும் இந்த விளையாட்டு, ‘ரோப்ளோக்ஸ்’ எனும் இணைய விளையாட்டுத் தளத்தில் வழங்கப்படுகிறது.
சட்ட அமலாக்க அதிகாரியாக இருப்பதை முப்பரிமாண அனுபவமாக விளையாட்டாளர்கள் பெறுவர்.
மெய்நிகர் உலகில் கால்பதிக்கும் வகையில் சிங்கப்பூர் காவல் துறையின் முதல் முயற்சி இது.
காவல்துறையினரின் சீருடைகளையும் வாகனங்களையும் இவ்விளையாட்டு மிக தத்ரூபமாகச் சித்திரிப்பதுடன் அவற்றைப் பெறுவதற்கு விளையாட்டாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்படும் சவால்களை வெற்றிகரமாக முடிக்க வேண்டும்.
பயிற்சி அதிகாரியாகத் தொடங்கி மூத்த காவல்துறை உதவி ஆணையர் பதவிவரை விளையாட்டாளர்கள் முன்னேறலாம்.
சிறுசிறு விளையாட்டுகள் வடிவில் இந்தச் சவால்கள் அமைந்திருக்கும். விளையாட்டாளர்கள் அவற்றில் திருடர்களைப் பிடித்தல், சுற்றுக்காவலின்போது சந்தேக நபர்களை அடையாளங்காணுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தில் மே 24ஆம் தேதி நடைபெற்ற காவல்துறைச் செயல்திட்டக் கருத்தரங்கு 2024ல் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள சவால் குறித்தும் அறிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மோசடிக்கு எதிராக அமைந்துள்ள இந்தச் சவால் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
குற்றத்தடுப்பு தொடர்பில் பொதுமக்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேலைக்கு ஆள்சேர்ப்புத் தளமாகவும் இந்த விளையாட்டு பயன்படுத்தப்படுவதாகக் காவல்துறைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
ரோப்ளோக்ஸ் மிக பிரபலமானதொரு இணைய விளையாட்டுத் தளம். அதன் மெய்நிகர் உலகங்களில் ‘அவதார்’ வடிவில் மாதந்தோறும் கிட்டத்தட்ட 200 மில்லியன் பயனாளர்கள் விளையாடுவதையும் உரையாடுவதையும் இணைவதையும் காணலாம்.
தீவிரவாதச் சிந்தனைப் போக்கால் ஈர்க்கப்பட்ட 16 வயது இளையர், மெய்நிகர் உலகங்களுடைய பல்வேறு ரோப்ளோக்ஸ் சர்வர்களில் சேர்ந்ததாகவும் அவை ‘ஐஎஸ்ஐஎஸ்’ பயங்கரவாத அமைப்பால் ஆக்கிரமிக்கப்பட்ட போர்ப் பகுதிகள் போல் காட்சியளித்ததாகவும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்குத் தெரியவந்துள்ளது குறித்து 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புகார் வெளியானது.
இதையடுத்து ‘மட்டா-வெர்ஸ்’ விளையாட்டைத் துவங்கிய சிங்கப்பூர் காவல்துறை, நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு கருவியாக ரோப்ளோக்ஸ் தளத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

