சிலேத்தார் விரைவுச்சாலை நான்கு வாகனங்களுக்கு இடையே விபத்து ஏற்பட்டதை அடுத்து சம்பவ இடத்திலிருந்து அகன்ற வாகன ஓட்டுநரைக் காவல்துறை தேடி வருகிறது.
சனிக்கிழமை (ஜூன் 21) காலை நடந்த அந்த விபத்தில் மூவர் காயமடைந்தனர்.
மத்திய விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலையில் ஒரு கார், ஒரு டாக்சி, ஒரு வேன் ஆகியவை விபத்துக்குள்ளான தகவல் ஏறத்தாழ 10 மணிக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் காவல்துறை கூறியது.
சிலேத்தார் விரைவுச்சாலையின் சிலேத்தார் வெஸ்ட் வெளிவாயிலுக்கு அருகே விபத்து நேர்ந்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
63 வயது டாக்சி ஓட்டுநரும் டாக்சியின் பயணிகள் இருவரும் சுயநினைவுடன் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
ரோட்ஸ்.எஸ்ஜி ஃபேஸ்புக் பக்கத்தில் கறுப்பு நிற கார் ஒன்று சேதமடைந்துள்ளதைக் காட்டும் காணொளி, ரோட்ஸ்.எஸ்ஜி தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
போக்குவரத்தின் எதிர்த்திசையில் வெள்ளைச் சட்டையும் வெள்ளைத் தொப்பியும் கொண்டுள்ள ஒருவரைக் காண்பிக்கும் மற்றொரு காணொளி காண்பிக்கிறது.
விசாரணை தொடர்கிறது.