காணாமல் போன சிறப்புத் தேவை சிறுவன் குறித்து காவல்துறை பொதுமக்களிடமிருந்து தகவல் நாடுகிறது.
11 வயது முகம்மது ஹைரில் எஃபெண்டி, ஆகக் கடைசியாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) காலை 11.05 மணி அளவில் புளோக் 29 மரின் கிரசென்ட்டில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) காலை 10.30 மணி நிலவரப்படி அச்சிறுவனை இன்னமும் காணவில்லை என்று ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டது.
ஹைரில் காணாமல் போனபோது சாம்பல் நிற அரைக்காற்சட்டை அணிந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அவன் சட்டை, காலணிகள் அணிந்திருக்கவில்லை.
ஹைரில், சிறப்புத் தேவை கொண்ட சிறுவன் என்றும் அவன் பெரும்பாலான வேளைகளில் பேசுவதில்லை என்றும் அவனது தாயாரான திருவாட்டி அயின், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார்.
ஹைரிலைக் காணவில்லை என்று வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் அவனது பெற்றோர் உணர்ந்தனர்.
மரின் டெரசில் உள்ள அவர்களது வீட்டைவிட்டு ஹைரில் செல்வதைக் காட்டும் காட்சி அவர்களது அண்டைவீட்டாரின் கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
தொடர்புடைய செய்திகள்
ஹைரில், மைண்ட்ஸ் டவுனர் கார்டன்ஸ் பள்ளியைச் சேர்ந்த மாணவன்.
அவனைத் தேடும் பணியில் அவனது ஆசிரியரும் ஈடுபட்டு வருகிறார்.
தேடும் பணியில் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளதாக ஹைரிலின் அண்டை வீட்டாரான திருவாட்டி நூர் லிண்டா தெரிவித்தார்.
ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, ஈஸ்ட் கோஸ்ட் லகூன் ஆகிய இடங்களிலும் தேடுதல் பணி நடந்து வருகிறது.
ஹைரிலின் இருப்பிடம் பற்றி தகவல் அறிந்தோர் 1800-255-0000 எனும் தொடர்பு அழைப்பு எண்ணில் காவல்துறையுடன் தொடர்புகொள்ளலாம். அல்லது www.police.gov.sg/i-witness எனும் இணையப்பக்கத்துக்குச் சென்று தகவல் தெரிவிக்கலாம். அனைத்துத் தகவல்களும் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும்.