உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடு ஒன்றில் தம்மைத்தாமே பூட்டிக்கொண்டு, தமக்கே தீங்கு விளைவித்துக்கொள்ளும் வகையில் ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடிய நிலையில் இருந்த 23 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதன்கிழமை (மே 20) மாலை சுமார் 6 மணியளவில் புளோக் 687A உட்லண்ட்ஸ் டிரைவ் 75ல் உதவி தேவை என்று தெரிவித்துக் காவல்துறைக்கு அழைப்பு கிடைத்தது.
குடியிருப்புக் கட்டடத்தின் இரண்டாவது மாடி வீடு ஒன்றில் அந்த இளையர் தம்மைத்தாமே பூட்டிக்கொண்டதோடு, சன்னல் வழியே மதுப் புட்டிகளை வெளியே வீசி எறிந்துள்ளார். இதனால், அப்பகுதியின் தரைத்தளத்தில் கண்ணாடித் துண்டுகள் சிதறி ஆபத்தான சூழல் நிலவியது.
அவர் தமக்குத்தாமே தீங்கு விளைவித்துக்கொள்ளக்கூடும் என மதிப்பிடப்பட்டதால், காவல்துறையின் சிறப்புச் செயல்பாட்டுப் பிரிவு, நெருக்கடிநிலை பேச்சுவார்த்தைப் பிரிவு, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவை உடனடியாக சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குடிமைத் தற்காப்புப் படையின் பேரிடர் உதவி, மீட்புக் குழு தயார் நிலையில் நிறுத்தப்பட்டு, அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடத்தின் கீழே பாதுகாப்பு மிதவையும் விரிக்கப்பட்டது.
சம்பவ இடத்தைச் சுற்றிக் காவல்துறை வாகனங்களும் சிறப்புப் படை வாகனங்களும் குவிக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது. ஏறத்தாழ 4 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு, இரவு 10.20 மணியளவில் காவல்துறை அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து, அந்த இளையரைக் கைது செய்தனர்.
பின்னர், அவர் தூக்குப் படுக்கையில் ஏற்றப்பட்டு, உட்லண்ட்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அப்போது அவர் சுயநினைவுடன் இருந்தார்.
சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்துகிறது.

