டெலிகிராம் கைப்பேசிச் செயலியில் உள்ள கணக்குகளைக் கொண்டு மோசடிகள் மீண்டும் கிளம்பியுள்ளதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தமுறை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக மோசடிகள் நடந்துள்ளதை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) காவல்துறை அறிக்கையொன்றில் தெரிவித்தது.
அத்தகைய மோசடிகளில், போலிப்பற்றுச்சீட்டுகளுக்கான வரைபடங்கள் கொண்ட இணைப்புகள் அவற்றுக்குத் தகுதிபெற்றுவிட்டதாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெலிகிராம் செயலியில் அனுப்பப்பட்டது. அவற்றில் உள்ள இணைப்புகளை ஏமாற்றப்பட்டவர்கள் அழுத்தியதும் அவர்கள் ஒரு இணையத்தளத்துக்கு இட்டுச் செல்லப்படுவர்.
அதில் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளும் குறியீடு (ஓடிபி) உட்பட பெயர், கைப்பேசி எண், அடையாள அட்டை எண் ஆகிய விவரங்களைத் தெரிவிக்கும்படி ஏமாந்தவர்களிடம் கேட்கப்படும்.
ஓடிபி குறியீட்டைத் தெரிவித்தவுடன் மோசடிக்காரர்கள் பாதிப்படைந்தவரின் டெலிகிராம் கணக்கைக் கையகப்படுத்திக்கொள்வார்கள்.
அந்த டெலிகிராம் கணக்கைக்கொண்டு ஏமாந்தவரின் தொடர்பில் இருக்கும் மற்றவர்களுக்கும் அதே முறையில் மோசடியான முதலீடுகள், திட்டங்கள் போன்ற செய்திகள் அனுப்பிவைக்கப்படும்.
எதிர்பாராத செய்திகள் கிடைத்ததாகப் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் உள்ளோர் தெரிவித்த பிறகு அல்லது அனுமதியின்றி நடவடிக்கைகள் செயலியில் நடக்கும்போதுதான் அவர்களது கணக்குகள் திருடப்பட்டதை ஒருவர் உணர்ந்துகொள்ளமுடியும்.
பற்றுச்சீட்டுகள் பெறுவதற்கு போக்குவரத்து அமைச்சு, டெலிகிராம் போன்ற செயலிகளை ஒருபோதும் பயன்படுத்தாது என்று காவல்துறை தெரிவித்தது.
பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகள் குறித்த உண்மையான அறிவிப்புகளை அதிகாரபூர்வ சமூக ஊடகங்கள், அல்லது அதன் இணையப் பக்கம் ஆகியவற்றைப் பயன்படுத்தி போக்குவரத்து அமைச்சு மக்களுடன் தொடர்புகொள்ளும் என்று காவல்துறை கூறியது.
ஓடிபி குறியீட்டைப் பகிரவேண்டாம்
யாரிடமும் ஓடிபி குறியீட்டையும் மறைச்சொற்களையும் கண்டிப்பாகப் பகிரவேண்டாம் எனக் காவல்துறை கேட்டுக்கொண்டது.
அதிகாரபூர்வமற்ற குறுஞ்செய்திகள், அறிவிப்புகளை நம்பி தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவதை தவிர்க்கும்படியும் பொதுமக்களுக்கு காவல்துறை நினைவூட்டியது.


