கேலாங் பாருவில் சனிக்கிழமை (அக்டோபர் 10) காவல்துறை வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அதை ஓட்டிச் சென்ற காவல்துறை அதிகாரி விசாரணையில் உதவி வருகிறார்.
அன்று காலை 7.45 மணி அளவில் பெண்டிமியர் சாலையை நோக்கிச் செல்லும் கேலாங் பாரு சாலையில் ஏற்பட்ட விபத்தில் அவ்வாகனம் சிக்கியதாக அக்டோபர் 11ஆம் தேதி ஊடகங்களின் கேள்விக்குப் பதிலளித்த காவல்துறை தெரிவித்தது.
அந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் காவல்துறை கூறியது.
“காவல்துறை வாகனத்தை ஓட்டிச் சென்ற 31 வயது ஆண் காவல்துறை அதிகாரி விசாரணையில் உதவி வருகிறார். இதன் தொடர்பில் காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,” என்று காவல்துறை தெரிவித்தது.
‘எஸ்ஜி ரோட் விஜிலாண்டே’ எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்களில், அந்த வாகனம் பச்சை நிறத் தடுப்பின்மீது மோதி அதைச் சேதப்படுத்தியிருப்பதைக் காண முடிந்தது.
அதோடு, விபத்து நடந்த இடத்தில் காவல்துறை அதிகாரிகள் சிலர் இருப்பதையும் அப்படங்களில் பார்க்கமுடிந்தது.
