புதிய காப்புறுதி சேவை மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை

2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் $21 மில்லியனுக்கு மேல் இழப்பு

புதிய காப்புறுதி சேவை மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை

2 mins read
f000aec7-6141-4bb8-8095-f534bc4f9d5c
காப்புறுதி சேவை மோசடியால் சராசரியாக $27,000 இழப்பு இதுவரை ஏற்பட்டுள்ளது.  - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரில் இவ்வாண்டு புதிதாக நடந்த காப்புறுதி சேவை மோசடிகளால் ஆறு மாதங்களில் $21 மில்லியனுக்கும் அதிகமான தொகை இழக்கப்பட்டுள்ளது.

காப்புறுதி மோசடிகள் தொடர்பில் 791 வழக்குகள் பதிவாகியுள்ளதாகக் காவல்துறை, சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) வெளியிட்ட 2025-ஆம் ஆண்டின் இடைக்கால மோசடி புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.

மோசடிக்காரர்கள் தாங்கள் என்டியுசி, யூனியன் பே போன்ற நிறுவனங்களின் அதிகாரிகள் எனப் பொய்யுரைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கெனவே காப்புறுதி திட்டங்கள் இருப்பதாக நம்ப வைத்தனர். 

இந்தத் திட்டங்களை ரத்து செய்ய அவர்களிடம் சொல்லி, பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று கட்டணமும் கேட்டுள்ளனர்.

காப்புறுதித் திட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு பணம் திரும்பப் பெற்றுத் தரப்படும் என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்குறுதி தரப்பட்டது. 

ஆனால், பலமுறை பணத்தை அனுப்பியும் உறுதியளிக்கப்பட்ட தொகை திரும்ப வராததால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.

காவல்துறையின் 2024-ஆம் ஆண்டின் அறிக்கையில் இந்த மோசடி வகை குறிப்பாகச் சொல்லப்படவில்லை. ஆனால், தற்போது 2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 10 மோசடிகளில் இந்த வகை, ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. 

காப்புறுதி சேவை மோசடியால் சராசரியாக $27,000 இழப்பு இதுவரை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பத்தில் மூன்று பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

பாதிப்புக்கு உள்ளானோரைத் தொடர்புகொள்ள மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் தொலைபேசி அழைப்புகள், வாட்ஸ்அப் ஆகிய வழிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

. இதில், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளிலிருந்து மோசடி செய்பவர்கள் வழங்கும் கடன்பற்று அட்டைகளுக்கு பணத்தை மாற்றியுள்ளதாக மே மாதம் முதல் கவனித்து வந்ததாகக் காவல்துறை கூறியது.

“அத்தகைய அட்டைகளின் கடன் வரம்பை அதிகரிக்கச் செய்வதற்காக இந்தப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். தங்கம் போன்ற விலையுயர்ந்த உலோகங்கள் மற்றும் நகைகளைப் பெரிய அளவில் வாங்க இது உதவுகிறது,” என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 

இந்த முறையானது அரசாங்க அதிகாரிகள் போல் நடித்துச் செய்யப்படும் மோசடிகளிலும் பயன்படுத்தப்படுவதாகக் காவல்துறை மேலும் கூறியுள்ளது.

காப்புறுதி சேவைகள் சிலவற்றின் மோசடிகளில், மோசடி செய்பவர்களின் வாட்ஸ்அப்பின் திரைப்பகிர்வு வசதி மூலம் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிப் பரிவர்த்தனை வரம்பை அதிகரிக்கச் செய்து, பணத்தை மாற்றுவதற்கு வழிகாட்டியுள்ளனர். மேலும், காப்புறுதித் திட்டங்களை ரத்து செய்ய உதவுவதாகக் கூறி, அரசாங்க அதிகாரிகள் அல்லது சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் ஊழியர்கள் போல் நடித்து மோசடி செய்த வழக்குகளும் பதிவாகியுள்ளன.

குறிப்புச் சொற்கள்