இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்பில் ஊர்வலம்: காவல்துறை எச்சரிக்கை

2 mins read
9cf242c9-512b-4f83-be20-571f92d93937
பொதுக் கூட்டம் அல்லது ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்வது அல்லது அதில் பங்கேற்பது குற்றமாகும் என்று காவல்துறை கூறியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுடன் தொடர்புடைய பொதுக்கூட்டங்கள், காவல்துறை அனுமதியின்றி அனுமதிக்கப்பட மாட்டா என காவல்துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

காவல்துறை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) வெளியிட்ட ஓர் அறிக்கையில், இந்த வாரயிறுதியில் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்பில் ஊர்வலம் செல்ல பொதுமக்கள் ஒன்றுகூடும் சாத்தியம் குறித்து தனது கவனத்துக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தது.

பொது ஒழுங்குச் சட்டத்தின்கீழ், அத்தகைய நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அனுமதி தேவை. பொதுக் கூட்டம் அல்லது ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்வது அல்லது அதில் பங்கேற்பது குற்றமாகும் என்று காவல்துறை கூறியது.

பிற நாடுகள் அல்லது வெளிநாட்டு அமைப்புகளின் அரசியல் நோக்கங்களை ஆதரிக்கும், அல்லது உணர்வுகளைத் தூண்டி பொது ஒழுங்குச் சம்பவங்களுக்கு வழிவகுக்கும் சாத்தியமுள்ள கூட்டங்களுக்கு தான் அனுமதி வழங்காது என்று காவல்துறை விவரித்தது.

ஏற்கெனவே ஏப்ரல் 30ஆம் தேதி காவல்துறை வெளியிட்டிருந்த அறிக்கையை மேற்கோள் காட்டிய அது, “இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்பாக ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்கள், ஊர்வலங்களுடன் பொதுமக்களின் பாதுகாப்பு, பாதுகாப்பு குறித்த கவலைகள்” இருப்பதாக மீண்டும் வலியுறுத்தியது.

“இஸ்ரேல்-ஹமாஸ் மோதலின் இருபுறமும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்த பல சம்பவங்கள் வெளிநாடுகளில் நடந்துள்ளன,” என்று காவல்துறை சொன்னது.

“வெளிநாடுகளில் நடந்த இந்தச் சம்பவங்கள் பொது ஒழுங்கிற்குப் பங்கம் விளைவித்து, உள்ளூர் சமூகங்களுக்கு குறிப்பிடத்தக்க இடையூறு ஏற்படுத்தி, பார்வையாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் கூட காயத்தை ஏற்படுத்தின,” என்று காவல்துறை விளக்கியது.

இதுபோன்ற நடவடிக்கைகள் சிங்கப்பூரில் வெவ்வேறு சமயங்களுக்கு இடையிலான அமைதியிலும் நல்லிணக்கத்திலும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி, சமூகங்களுக்கு இடையே பதற்றத்தை அதிகரிக்கக்கூடும் என்றும் காவல்துறை மேலும் கூறியது.

குறிப்புச் சொற்கள்