பொதுமக்கள் ‘சிடிசி’ பற்றுச்சீட்டுகள் போன்ற அரசாங்க வழங்குதொகைகளைப் பெற்றுக்கொள்ளும்போது கவனத்துடன் செயல்பட வேண்டுமென்று காவல்துறை ஆலோசனை கூறியுள்ளது.
பாதிக்கப்பட்டோரின் தனிப்பட்ட விவரங்களை இணையம் வழியாகப் பெறும் மோசடிச் சம்பவங்கள் மீண்டும் தலைதூக்குவது இதற்குக் காரணம்.
இத்தகைய மோசடிகளில் போலியான இணையத்தளங்கள் அல்லது தகவல் வரைகலை (Infographics) மூலம் மோசடிக்காரர்கள், பாதிக்கப்பட்டோரைப் போலியான இணைய முகவரிக்கு இட்டுச் செல்ல முயல்கின்றனர்.
இவற்றில் ‘சிடிசி’ பற்றுச்சீட்டுகள், உத்தரவாதத் தொகுப்பு (Assurance Package) ரொக்கம், ‘ஜிஎஸ்டி’ பற்றுச்சீட்டு ரொக்கம் போன்ற வழங்குதொகைகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.
இத்தகைய தகவல் வரைகலையை இன்ஸ்டகிராம் பதிவில் பார்த்து, போலியான ‘ரிடீம்எஸ்ஜி’ இணைய முகவரி மூலம் ‘சிடிசி’ பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும்படி மக்கள் தூண்டப்படுவர் என்று காவல்துறை பிப்ரவரி 14ஆம் தேதி எச்சரித்தது.
வரவுசெலவுத் திட்டம் 2025 தொடர்பாக நிதியமைச்சு வெளியிட்டதாகக் கூறப்படும் போலியான தகவல் வரைகலையை டெலிகிராம் மூலம் சிலர் பெறக்கூடும். வழங்குதொகையைப் பெற்றுக்கொள்வதற்கான இணைய முகவரியும் அதில் இணைக்கப்பட்டிருக்கும்.
வங்கிக் கணக்கு விவரங்கள், தனிப்பட்ட விவரங்களைப் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படும் என்று காவல்துறை கூறியது.
‘சிடிசி’ பற்றுச்சீட்டுகளை ‘சிங்பாஸ்’ மூலம் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
தகுதிபெறும் குடிமக்கள் உத்தரவாதத் தொகுப்புத் திட்ட வழங்குதொகையைப் பெற எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளத் தேவையில்லை.
தனிப்பட்ட விவரங்கள் அல்லது வங்கிக் கணக்கு விவரங்களைக் கோரியோ பணம் அனுப்பும்படியோ அரசாங்க வழங்குதொகைகளைப் பெறுவதற்கு அதிகாரபூர்வமற்ற செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும்படியோ கூறும் தகவல்கள் ஒருபோதும் அனுப்பப்படமாட்டா என்று காவல்துறை நினைவுபடுத்தியது.