அரசாங்கத்தின் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு, மெடிசேவ் தொடர்பான தகவல்கள் என்ற போர்வையில் குறுஞ்செய்தி அனுப்பி, அதன் வாயிலாகப் பொதுமக்களின் டெலிகிராம் கணக்குகளை முடக்கும் புதிய மோசடி குறித்துக் காவல்துறை வியாழக்கிழமை (ஜூலை 16) எச்சரித்துள்ளது.
முன்னதாக, தகுதிபெறும் சிங்கப்பூரர்கள் ஏறத்தாழ 1.5 மில்லியன் பேருக்கு ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டத்தின்கீழ் தலா $850 வரை ரொக்கமாக வழங்கப்படும் என்று நிதியமைச்சு ஜூலை 9ஆம் தேதி அறிவித்தது. மூத்த குடிமக்கள் கிட்டத்தட்ட 710,000 பேர் தங்கள் மெடிசேவ் கணக்குகளில் $450 வரையிலான நிரப்புதொகையைப் பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மோசடிக்காரர்கள் டெலிகிராம் செயலியில் குறுஞ்செய்தி அனுப்பியது தெரியவந்துள்ளது. போலியான தகவல் வரைகலைப் படங்களை அனுப்பி, வழங்குதொகைக்குத் தகுதிபெறுகிறார்களா என்று இணையப் பக்க இணைப்பு ஒன்றில் சரிபார்க்கும்படியோ டெலிகிராம் சரிபார்ப்புக் குறியீட்டைப் பதிவிடும்படியோ பாதிக்கப்பட்டோரிடம் அவர்கள் வலியுறுத்தினர்.
அதன்மூலம், பாதிக்கப்பட்டோரின் டெலிகிராம் கணக்குகளை மோசடிக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர், அக்கணக்குகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் பணம் கேட்டனர்.
நிதியமைச்சு ஒருபோதும் டெலிகிராம் செயலி வாயிலாகப் பொதுமக்களைத் தொடர்பு கொள்ளாது என்று காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
பொதுமக்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்வதற்கு முன்பாக விழிப்புடன் இருக்குமாறும், அடையாளம் தெரியாத இணையப் பக்கங்களுக்கான இணைப்புகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சந்தேகத்திற்குரிய குறுஞ்செய்திகள் வந்தால், உடனடியாக ‘ஸ்கேம்ஷீல்டு’ செயலி மூலம் புகார் அளிக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

