மின்னிலக்க நாணய வர்த்தகத்துடன் தொடர்புடைய மின்னஞ்சல் கணக்குகள் ஊடுருவல் செய்யப்பட்ட நபர்களைத் தரவுத் திருட்டு குறித்து விழிப்புடன் இருக்குமாறும் தங்களது மின்னஞ்சல் பாதுகாப்பைத் தவறாமல் மதிப்பாய்வு செய்யுமாறும் காவல்துறை வலியுறுத்துகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் மின்னிலக்க நாணயக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் கணக்குகள் அனுமதியின்றி ஊடுருவப்பட்டுள்ளன.
அதனை அடுத்து மின்னிலக்க நாணயக் கணக்குகள் ஆகஸ்ட் நடுப்பகுதியில் இருந்து ஊடுருவப்பட்டு வந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மின்னஞ்சல் கணக்குகள் முன்பு மற்ற தளங்களில் நடந்த தரவுத் திருட்டுகளில் சிக்கியிருப்பதை விசாரணைகளின் வழி தெரியவந்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் உள்நுழைவு விவரங்கள் கசிந்திருக்கலாம் என்றும் காவல்துறை, சனிக்கிழமை (செப்டம்பர் 12) தெரிவித்துள்ளது.
“இணையச் சேவைகளுக்கு ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்தும் நபர்களைச் சாதகமாகப் பயன்படுத்தி, கசிந்த மின்னஞ்சல் விவரங்களைக் கொண்டு குற்றவாளிகள் அவர்களின் மின்னிலக்க நாணயக் கணக்குகளுக்குள் புகுந்திருக்கலாம்,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊடுருவல்களைத் தவிர்க்க, பொது மக்கள் வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்தவும், இரட்டை மறைச்சொல் முறை (‘டூ-ஃபேக்டர்’) போன்ற பாதுகாப்பு முறைகளைச் செயல்படுத்தவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. ஒரே கடவுச்சொல்லைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
தங்களது மின்னஞ்சல் கணக்குகளில் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் ஏதேனும் நடந்துள்ளதா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
கணக்கின் உள்நுழைவு விவரங்கள் கசிந்திருப்பது தெரிந்தால் உடனடியாகக் கடவுச்சொல்லை மாற்ற வேண்டும்.

