245 அரசியல் நன்கொடைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன

2 mins read
33290910-8582-4ff7-b281-bc3ec16772ee
சிங்கப்பூரின் தேர்தல் விதிகளின் கீழ், அனைத்து வேட்பாளர்களும் அரசியல் நன்கொடை படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மே 3 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் நன்கொடை சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்த 245 தனிநபர்களுக்கும் தேர்தல் துறை அதற்குரிய படிவங்களை வழங்கியுள்ளது.

ஏப்ரல் 21 அன்று வெளியிடப்பட்ட ஓர் ஊடக அறிக்கையில், தகுதியுள்ள 42 விண்ணப்பதாரர்களுக்கு மலாய் சமூகக் குழுவின் சான்றிதழ்களையும், தகுதியுள்ள 37 விண்ணப்பதாரர்களுக்கு இந்திய மற்றும் பிற சிறுபான்மை சமூகக் குழுக்களின் சான்றிதழ்களையும் வழங்கியதாக தேர்தல் துறை அறிவித்தது.

இறுதி நாளான ஏப்ரல் 19ஆம் தேதிக்குள், அரசியல் நன்கொடை சான்றிதழ்களுக்கான 245 விண்ணப்பங்களைப் பெற்றதாக தேர்தல் துறை ஏப்ரல் 20ஆம் தேதி கூறியது. நாடாளுமன்றத்தில் 97 இடங்களுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதை விட அதிகமாக இருக்கலாம் என்பதே இதன் பொருள்.

அரசியல் கட்சிகள் கூடுதல் அல்லது காத்திருப்புச் சான்றிதழ்களுக்கு விண்ணப்பிப்பது அசாதாரணமானது அல்ல. 2020 பொதுத் தேர்தலில், அரசியல் நன்கொடைச் சான்றிதழ்களுக்காக தேர்தல் துறை 226 விண்ணப்பங்களைப் பெற்றது. இருப்பினும் 93 நாடாளுமன்ற இடங்களுக்குப் போட்டியிட 192 வேட்பாளர்கள் மட்டுமே இறுதியில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

சிங்கப்பூர் தேர்தல் விதிமுறைப்படி வேட்பாளர்கள் அரசியல் நன்கொடைப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அதில் எவ்வளவு நிதி நன்கொடையாக வந்தது, நன்கொடை நிதிச் சட்டத்திற்கு உட்பட்டதா என்பது போன்ற தகவல்களைக் கொடுக்க வேண்டும்.

அரசியல் நன்கொடைச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு இந்தப் படிவங்கள் அவசியம். படிவத்தைச் சரிபார்த்த பிறகு அரசியல் நன்கொடைக்கான பதிவாளர், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள் சான்றிதழ்களை வழங்குவார்.

வேட்புமனு தாக்கல் தினத்தின்போது இந்தச் சான்றிதழை வேட்பாளர் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்தப் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தினம் ஏப்ரல் 23 ஆகும். தேர்தல் தினம் மே 3ஆம் தேதியாகும்.

குறிப்புச் சொற்கள்