‘வன்போலி’ (deepfake) எனப்படும் போலியாக உருமாற்றப்பட்ட படங்களை வெளியிடாமல் இருப்பதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என ஐந்து அமைச்சர்கள் உட்பட 31 அரசாங்க அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன.
காணொளிகளிலிருந்து எடுக்கப்பட்ட இந்தப் படங்களில், தவறான அல்லது முறைகேடான சூழல்களில் இருந்த நபர்களின் முகங்களுக்குப் பதிலாக பாதிக்கப்பட்டோரின் முகங்கள் பயன்படுத்தப்பட்டன.
பொதுத் துறை அதிகாரிகளுடன் அரசாங்க அலுவலகப் பதவியில் உள்ள 12 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நவம்பர் 28ஆம் தேதி தகவல், மின்னிக்க மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது.
பாதிக்கப்பட்டவர்களில் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங், தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, பிரதமர் அலுவலக அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் ஆகியோரும் அடங்குவர்.
இவர்களுடன் மூத்த துணை அமைச்சர்கள் ஜனில் புதுச்சேரி, டான் கியட் ஹாவ், கோ போ கூன், துணை அமைச்சர்கள் ஆல்வின் டான், முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம்; மூத்த நாடாளுமன்றச் செயலாளர்கள் பே யாம் கெங், எரிக் சுவா ஆகியோரும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த முறைகேடான படங்களை வெளியிடாமல் இருக்க 50,000 USDT எனப்படும் ஒருவகை மின்னிலக்க நாணயத்தில் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மின்னஞ்சல்கள் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டோரின் படங்கள் யாவும் லிங்க்ட்இன் போன்ற பொதுத் தளங்களில் கிடைக்கக்கூடியவை என்று தகவல், மின்னிக்க மேம்பாட்டு அமைச்சு குறிப்பிட்டது.
உள்துறை அமைச்சு, கல்வி அமைச்சு, மனிதவள அமைச்சு, கட்டட, கட்டுமான ஆணையம், சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் ஆகியவையும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
மின்னஞ்சல்கள் குறித்த புகார்கள், ‘கவ்டெக்’ எனப்படும் அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பிடம் அளிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.
முன்னதாக, பொதுச் சுகாதாரப் பராமரிப்புக் கழகங்களைச் சேர்ந்த பணியாளர்களுக்கும் இதுபோன்ற மின்னஞ்சல்கள் வந்ததாக சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. நவம்பர் 26ஆம் தேதி இத்தகைய மின்னஞ்சல்கள் குறித்து அறிந்துகொண்டது அமைச்சு.
பாதிக்கப்பட்ட அமைப்புகள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளன. அத்துடன், பண இழப்பு ஏதும் இதுவரை இல்லை என்றும் கூறப்படுகிறது.
“சட்டத்தை மீறியவர்களின் தந்திரங்கள் இழிவானவை. சிங்கப்பூரர்கள் சிலர் இதேபோன்ற மோசடிக்கு ஆளானதாகக் காவல்துறை ஆண்டின் முற்பாதியில் தெரிவித்திருந்தது. சிலர் குற்றத்தில் ஈடுபட்டோருக்கு பணமும் அனுப்பினர்,” என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ தமது ஃபேஸ்புக் பதிவில் நவம்பர் 28ஆம் தேதி குறிப்பிட்டார்.
இத்தகைய மிரட்டல்களைப் பெறுவோர் காவல்துறையினருக்குப் புகாரளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

