தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹவ்காங்கில் வென்றால் கூடுதல் பேருந்து சேவைகள்: மசெக வேட்பாளர் வாக்குறுதி

2 mins read
3a007ac5-cbe9-4945-a7e5-41bfdcea13a7
வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர் மார்ஷல் லிம் குடியிருப்பாளர் ஒருவரைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அரசியல் என்பது மக்கள் மீதான அக்கறையுடன் தொடங்க வேண்டும் என்று மக்கள் செயல் கட்சியைப் பிரதிநிதித்து ஹவ்காங் தனித்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மார்ஷல் லிம் புதன்கிழமை (ஏப்ரல் 30) தமது பிரசார உரையில் கூறினார்.

ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் தமது முதல் பிரசார உரையை நிகழ்த்தினார் திரு லிம்.

ஹவ்காங் குடியிருப்பாளர்களைத் தமது உரையில் பாராட்டிய திரு லிம், போராட்ட குணம் எப்போதும் தம்முடன் இருந்து வருவதாகத் தெரிவித்தார்.

“அதே வேகத்துடன் நான் ஹவ்காங் மக்களுக்காகவும் பாடுபடுவேன்,” என்றார் அவர்.

பாட்டாளிக் கட்சி 1991ஆம் ஆண்டு ஹவ்காங் தனித்தொகுதியைக் கைப்பற்றியதைக் குறிப்பிட்டுப் பேசிய திரு லிம், “ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய தொடக்கத்துக்கான வாய்ப்பு வருகிறது,” என்று தம் ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்டால் கூடுதல் பேருந்துச் சேவைகள், மேம்பட்ட பேருந்து வழித்தடங்கள், பேருந்துகளுக்கான காத்திருப்பு நேரத்தைக் குறைத்தல், முதியோருக்கான கூடுதல் சேவைகள், குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு உதவுதல் ஆகிய கொள்கைகளுக்குக் குரல் கொடுக்கவிருப்பதாகத் தெரிவித்தார் திரு லிம்.

நீடித்த நிலைத்தன்மையைப் போற்றும் வட்டாரமாக ஹவ்காங் மாற உதவப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

பத்து ஆண்டுகளுக்கு மேலாகப் பொது, தனியார் துறைகளில் குற்றவியல் வழக்கறிஞராகப் பணியாற்றிய திரு லிம், இத்தேர்தலில் பாட்டாளிக் கட்சியின் டெனிஸ் டானுக்கு எதிராகப் போட்டியிடுகிறார்.

மக்களுக்காகச் சேவையாற்றக்கூடிய கட்சியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இந்தத் தேர்தலில் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்றார் திரு லிம்.

“இந்தத் தேர்தல் மசெக அல்லது பாட்டாளிக் கட்சி பற்றியதன்று. இது உங்களைப் பற்றியது,” என்று திரு லிம் தமது பிரசார உரையில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்