வீடு தேடி வரும் வாக்கு அட்டை

2 mins read
a708a0f1-597d-470c-ad6e-918bb8163dd9
வெளிநாட்டுத் தூதரகங்களில் 10 வாக்களிப்பு நிலையங்கள் இருக்கும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வேட்புமனுத் தாக்கல் நிறைவுற்று, 2025 பொதுத் தேர்தல் களத்தில் பிரசாரம் தீவிரமடைந்து உள்ளது.

2025 பிப்ரவரி 1 நிலவரப்படி, வாக்காளர் பதிவேட்டில் 2,753,226 வாக்காளர்கள் இடம்பெற்று உள்ளனர். இது, 2020 பொதுத் தேர்தலைக் காட்டிலும் 101,791 அதிக வாக்காளர்கள். ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில் 2,651,435 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்று இருந்தனர்.

2023 அதிபர் தேர்தலில் 2,709,407 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்று இருந்தனர்.

பொதுவாக, வேட்புமனுத் தாக்கல் முடிந்ததும் இரண்டு அல்லது மூன்று நாள்களில் வாக்கு அட்டை வாக்காளர்களின் வீடு தேடி வரத் தொடங்கும்.

சிங்பாஸ் செயலி மூலம் மின்னலக்க வாக்கு அட்டையைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

வீட்டு முகவரிக்கு வாக்கு அட்டை வந்து சேராதபட்சத்தில், மின்னிலக்க வாக்கு அட்டையைப் பயன்படுத்தலாம். ஆனால், அவ்வாறு செய்ய அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும்.

வெளிநாடுகளில் வசிக்கும் 18,389 சிங்கப்பூரர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கப் பதிவு செய்துள்ளனர்.

அவர்களில் 9,759 பேர் அஞ்சல் மூலம் வாக்களிக்கவும் 8,630 பேர் வெளிநாட்டு வாக்களிப்பு நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று வாக்களிக்கவும் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

வெளிநாட்டு வாக்காளர் சார்ந்துள்ள தொகுதியில் போட்டி இருந்தால் வாக்களிப்பு நடைமுறை குறித்து அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும்.

வெளிநாட்டுத் தூதரகங்களில் 10 வாக்களிப்பு நிலையங்கள் இடம்பெற்று இருக்கும்.

அஞ்சல் வழி வாக்களித்தல்

அஞ்சல் வழி வாக்களிக்கும் முறை 2023 அதிபர் தேர்தலில் அறிமுகம் கண்டது.

வெளிநாடுகளில் உள்ள சிங்கப்பூரர்கள், வாக்காளர் சேவை இணையப்பக்கத்திற்குச் சென்று வாக்குச் சீட்டையும் கடித உறையையும் பதிவிறக்கம் செய்து அச்சிட வேண்டும்.

வாக்களிப்புக்கு முன்தினமான மே 2ஆம் தேதிக்குள், கடித உறையில் வாக்குச் சீட்டை வைத்து அஞ்சலில் அனுப்பிவிட வேண்டும்.

வாக்களிப்பு நடைபெறும் மே 3ஆம் தேதிக்குப் பின்னர் 10 நாளுக்குள் வாக்குச் சீட்டு சீங்கப்பூர் வந்தடைய வேண்டும்.

வாக்களிப்பது கட்டாயம். வாக்கு ரகசியமானது.

தகவல்: தேர்தல் துறை
குறிப்புச் சொற்கள்