சிங்கப்பூரின் பலதுறைத் தொழிற்கல்லூரிகள் அவற்றின் விரிவுரை மண்டபங்களை ஆக்ககரமான, புத்தாக்கம் நிறைந்த இடங்களாக மாற்றிவருகின்றன.
மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு வடிவங்களிலும் வண்ணங்களிலும் பலர் ஒரே நேரத்தில் அமரக்கூடிய விரிவுரை மண்டபங்களாக அவை உருமாறியுள்ளன.
சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் கடந்த ஆண்டு வரை பிளாஸ்டிக் இருக்கைகள் நிறைந்திருந்த விரிவுரை மண்டபம் இப்போது தயாரிப்பு அறையாக வடிவம் பெற்றுள்ளது.
அதன்வழி கற்றல் மேம்பட்டுள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
பலதுறைத் தொழிற்கல்லூரியில் உள்ள மற்றொரு விரிவுரை மண்டபம் மலையேற்றப் பயிற்சி நடைபெறுவதற்கான மிகப் பெரிய சுவர் அமைப்பைக் கொண்டுள்ளது.
2023ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்த வசதியை ஒவ்வொரு வாரமும் ஏறக்குறைய 130 மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.
வகுப்பறைக் கல்விக்கு அப்பால் இணையம் வழியாகவும் மாணவர்கள் இப்போது கல்வி கற்பதால் மிகப் பெரிய விரிவுரை மண்டபங்கள் ஆள் அரவமற்ற இடங்களாக மாறிவருகின்றன.
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியும் 2010ஆம் ஆண்டு தொடங்கி அதன் விரிவுரை மண்டபங்களின் அளவைச் சுருக்கிக்கொண்டுள்ளது. சிறிய விரிவுரை அறைகள், அர்த்தமுள்ள கற்றலுக்கு வழிவகுப்பதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
மின்னிலக்கக் கற்றல் முறையைப் பின்பற்றும் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இடம்பெறும் நேருக்கு நேர் கற்றல் இன்னும் ஆழமான வகையில் நடைபெற உதவுவதாக ஆசிரியர்களும் குறிப்பிட்டனர்.
நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி கொவிட்-19 காலக்கட்டத்தின்போது அனைத்து விரிவுரைகளையும் இணையத்திற்கு மாற்றியது. விரிவுரைகளில் கேட்கப்படும் கேள்விகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நேரடியாக விளக்குகின்றனர்.
அடுத்து, வளாகத்தில் உள்ள 50 விரிவுரை மண்டபங்களில் குறைந்தது பாதியை மாணவர்களுக்கு ஏற்ற கூடங்களாக மாற்ற நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி முடிவெடுத்துள்ளது.
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி தனது 57 விரிவுரை மண்டபங்களில் 12 மண்டபங்களை மாணவர்களுக்கான கற்றல் கூடங்களாக மாற்றியுள்ளது.

