முதியோருடன் பொங்கல் கொண்டாடிய ‘லிஷா’

3 mins read
9a46c7e8-a1cf-4110-a6a1-ecf9c0400513
நிகழ்ச்சியின் ஓர் அங்கமாகப் பாரம்பரிய முறையில் மண்பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. - படம்: த.கவி

கொண்­டாட்ட உணர்­வைப் பகிர்ந்து, சமூ­கத்­திற்கு ஆத­ரவளிக்கும் நோக்‌கத்தில் லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் பொங்கல் விருந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) பொங்கல் திருநாளன்று ஏற்பாடு செய்திருந்தது.

பொங்கல் திருநாளைக் கொண்டாட ஜாமியா, ஸ்ரீ நாராயண மி‌‌ஷன், சன்லவ் முதலிய தாதிமை இல்லங்களைச் சேர்ந்த முதியோர் 60 பேருடன் ஜாமியா இடைவழி இல்லத்தைச் சேர்ந்த சிலரையும் கிளைவ் ஸ்திரீட்டில் அமைந்துள்ள ‘பொலி’ கூடாரத்தில் இந்நிகழ்ச்சி ஒன்றிணைத்தது.

சிங்கப்பூரிலுள்ள சில தாதிமை இல்லங்களைச் சேர்ந்த முதியவர்கள் 60 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சிங்கப்பூரிலுள்ள சில தாதிமை இல்லங்களைச் சேர்ந்த முதியவர்கள் 60 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். - படம்: த.கவி

“பொங்கல் கொண்­டாட்டங்களில் முதியவர்களை ஈடுபடுத்த வேண்டும், வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த அவர்கள் நமது பண்பாட்டை அறிந்துகொண்டு, அனுபவித்து மகிழவேண்டும் என்ற நோக்‌கத்துடன் ஆண்டுதோறும் நாங்கள் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துவருகிறோம்,” என்றார் லிஷா தலைவர் ரகுநாத் சிவா.

உள்துறை, தேசிய வளர்ச்சித் துணை அமைச்சர் டாக்டர் முகம்மது ஃபைஷால் இப்ராகிம் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வருகை தந்திருந்த அனைவருடனும் சேர்ந்து அமர்ந்து உணவு உட்கொண்டு, கலந்துரையாடிப் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார். மேலும், அவர் ஏற்பாட்டாளர்கள் முன்கூட்டியே தயார்செய்து வைத்திருந்த $20 மதிப்புள்ள பண உறைகளையும் அன்பளிப்புப் பைகளையும் அனைவருக்கும் வழங்கி, பொங்கல் வாழ்த்து தெரிவித்துக்கொண்டார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உள்துறை, தேசிய வளர்ச்சித் துணை அமைச்சர் டாக்டர் முகம்மது ஃபைஷால் இப்ராகிம் கலந்துகொண்டு, பண உறைகளை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உள்துறை, தேசிய வளர்ச்சித் துணை அமைச்சர் டாக்டர் முகம்மது ஃபைஷால் இப்ராகிம் கலந்துகொண்டு, பண உறைகளை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். - படம்: த.கவி

நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, இந்தியத் தாள வாத்திய இசை முழங்க, பாரம்பரிய முறையில் மண்பானையில் பொங்கல் வைக்கப்பட்டது.

“சிங்கப்பூரில் நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையும் நமது மக்களையும் தேசத்தையும் கொண்டாடுகிறது,” என்று டாக்டர் ஃபைஷால் தமிழ் முரசிடம் கூறினார்.

அவ்வகையில், இந்தப் பொங்கல் நிகழ்ச்சி, இனம், மொழி, சமயம் பாராது, ஒரே சிங்கப்பூர்ச் சமூகமாக ஒன்றிணைந்து பண்டிகையைக் கொண்டாடுவதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்ததாகவும் நன்றியுணர்வும் பகிர்தலும் நிறைந்த ஒன்றாக அமைந்ததாகவும் கூறிய அவர், சமூகத்திற்குத் திருப்பித்தரும் இப்பழக்‌கத்தைச் சிங்கப்பூரர்களாகிய நாம் தொடர்ந்து கடைப்பிடிக்‌க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை உறுப்பினர்கள் சிலர் முதியவர்களுடன் நேரம் செலவிட்டனர்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை உறுப்பினர்கள் சிலர் முதியவர்களுடன் நேரம் செலவிட்டனர். - படம்: த.கவி

லிஷா ஏற்பாடு செய்திருந்த மற்றொரு நிகழ்ச்சியில், லிட்டில் இந்தியா ஆர்கேட்டிற்கு வெளியே மாலையில் பொதுமக்களுக்கு இலவசமாகச் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் பொங்கலின்போது நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், இவ்வாண்டு ஜனவரி 14 முதல் 16ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 10,000 பேருக்குப் பொங்கல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்‌கப்படுகிறது.

லிட்டில் இந்தியா ஆர்கேடிற்கு வெளியே பொதுமக்களுக்கு இலவசமாகச் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.
லிட்டில் இந்தியா ஆர்கேடிற்கு வெளியே பொதுமக்களுக்கு இலவசமாகச் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. - படம்: த.கவி

பெருமழை பெய்த காரணத்தால் இந்நிகழ்ச்சி அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டபோதும், நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்தனர்.

ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில், ஸ்ரீ ஶ்ரீநிவாசப் பெருமாள் கோவில், பொத்தோங் பாசிர் ஸ்ரீ சிவ துர்க்கா கோவில் ஆகிய மூன்று கோவில்களில் பொங்கல் தயார்செய்யப்பட்டு லிட்டில் இந்தியா ஆர்கேடுக்‌கு எடுத்துவரப்பட்டிருந்தது.

மூன்று கோவில்களில் பொங்கல் தயார்செய்யப்பட்டு லிட்டில் இந்தியா ஆர்கேடுக்‌கு எடுத்துவரப்பட்டிருந்தது.
மூன்று கோவில்களில் பொங்கல் தயார்செய்யப்பட்டு லிட்டில் இந்தியா ஆர்கேடுக்‌கு எடுத்துவரப்பட்டிருந்தது. - படம்: த.கவி

சிங்கப்பூரர்களுக்‌கு மட்டுமின்றிச் சுற்றுப்பயணிகளுக்கும் பாரம்பரிய இந்திய இனிப்பு வகை ஒன்றைச் சுவைத்துப் பார்த்து, பொங்கல் பண்டிகைக் காலத்தை ஒன்றிணைந்து கொண்டாடும் வாய்ப்பை இந்நிகழ்ச்சி வழங்கியது.

வேலை முடிந்து லிட்டில் இந்தியாவுக்‌கு வந்திருந்த ஜூரோங் ஈஸ்ட்டில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர் அரவிந்த், வழங்கப்பட்ட பொங்கல் இந்தியாவிலிருக்‌கும் தனது வீட்டை நினைவூட்டியதாக சொன்னார்.

“லிட்டில் இந்தியாவில் இடம்பெறும் பொங்கல் விழாவில் முதல் முறையாகக் கலந்துகொள்ள வந்துள்ளோம். குறிப்பாக, என் மகளின் தந்தை இந்தியர் என்பதால், பாரம்பரிய இந்திய இசையையும் உணவையும் இங்கு அனுபவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறோம்,” என்றார், தன் மகளுடன் வந்திருந்த ஓவியரும் குழந்தைகளுக்கான படைப்புகளை உருவாக்கும் எழுத்தாளருமான ஸ்டெல்லா, 38.

குறிப்புச் சொற்கள்