‘அறுவடை’ கருப்பொருளில் ஒன்றிணைவை ஊக்குவிக்கும் பொங்கல் நிகழ்ச்சிகள்

2 mins read
13188743-4dcd-46fe-be65-9fa7617de776
2023ஆம் ஆண்டு உணவுப் பொருள்களால் உருவாக்கப்பட்ட ஆகப் பெரிய கோலம். - படம்: இந்திய மரபுடைமை நிலையம்
multi-img1 of 2

அறுவடையை மையமாகக் கொண்டு கிராமியக் கருப்பொருளில், அறுவடைக்காலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வண்ணம் பல்வேறு அங்கங்களுடன் இந்திய மரபுடைமை நிலையத்தின் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டவுள்ளது.

இவ்வாண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, சமூகமாக ஒன்றிணைந்து பொங்கல் கொண்டாடுவதை ஊக்குவிக்கும் வண்ணம் பல சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள், இல்லப் பணிப்பெண்கள் உள்ளிட்ட தொண்டூழியர்களின் பங்களிப்புடன் திருவாட்டி விஜயா மோகன் தலைமையில் மாபெரும் கோலமிடப்படவுள்ளது. அறுவடையை உணர்த்தும் வகையில் உணவுப்பொருள்கள் காய்கறிகளைக் கொண்டு வடிவமைக்கப்படவுள்ள இக்கோலம் ஜனவரி 18 ஆம் தேதியன்று நிலையத்தில் அமைக்கப்படவுள்ளது.

சிராங்கூன் ‘சன்லவ்’ துடிப்புடன் மூப்படைதல் நிலையத்தைச் சேர்ந்த மூத்தோர், தங்கள் கைகளால் வண்ணம் தீட்டிய 30 பொங்கல் பானைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

அதில் பங்கேற்ற மூத்தோரான தமிழ்வாணி, 68, “எங்களுக்கு இது மாறுபட்ட அனுபவம். அனைவருடனும் இணைந்து வரைந்ததுடன் எங்கள் படைப்பைப் பலரும் கண்டு ரசிப்பது கூடுதல் மகிழ்ச்சி,” என்றார்.

பொங்கல் திருநாள், சூரியப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் கொண்டாடும் முறையையும் காட்டும் நிறுவல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து, பொங்கல் செய்முறை நேரடிக் காட்சிகளும் இந்தியாவின் வில்லியனூரைச் சேர்ந்த திரு வீ கே முனுசாமியின் பானை செய்யும் பயிலரங்கும் இடம்பெறவுள்ளன.

கடந்த 22 தலைமுறையாகப் பானை வனையும் தொழிலை மேற்கொள்ளும் குடும்பத்தைச் சேர்ந்த வில்லியனூர் கிருஷ்ணன் முனுசாமி, 59, “ஐம்பூதங்களையும் உள்ளடக்கிய கலை மட்பாண்டம் செய்தல். அதனை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி,” என்றார்.

பங்கேற்பாளர்கள் கிராமத்து வீடு, பொம்மை மாடுகள் ஆகியவற்றின்முன் நின்று படமெடுத்துக்கொள்ள ஏதுவாக புகைப்படமெடுக்கும் இடங்களும் அமைந்துள்ளன.

பாரம்பரிய உடைகளான சேலை அணிவது, முறத்தைக் கொண்டு நெல் புடைப்பது, ஐந்தாங்கல், பல்லாங்குழி, ஆடுபுலியாட்டம் ஆகிய அனுபவங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒயிலாட்டம், சிலம்பாட்டம் ஆகிய மரபுக்கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

தென்னிந்தியாவில் புகழ்பெற்ற ‘புள்ளிக் கோலம்’ கற்றுத் தரும் பயிலரங்கு, தஞ்சாவூர் ஓவியப் பயிலரங்கு ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகள் பொங்கல் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் நடவடிக்கைகளுடன் கூடிய புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இலைச் சாப்பாடு அனுபவம், குழந்தைகளுக்கான கதைசொல்லல் ஆகியவையும் இடம்பெறும். பல்வேறு வீட்டுத் தொழில்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் ‘பொங்கல் திருவிழா சந்தை’யும் அமைக்கப்படுகிறது.

பண்பாட்டையும் படைப்பாற்றலையும் இணைக்கும் வகையில் அமையும் இந்நடவடிக்கைகள் ஜனவரி 10, 11, 17, 18 ஆகிய நாள்களில் காலை 10 மணிமுதல் 6 மணிவரை நடைபெறும். அனுமதி இலவசம்.

இதுகுறித்துப் பேசிய நிலையத்தின் பொது மேலாளர் கிருத்திகா மகேந்திரன், “பல ஆண்டுகளாக நிலையம் பொங்கல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அவ்வகையில், இவ்வாண்டும் அனைத்து வயதினருக்கும் ஏற்ற பல நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது சமூக ஒன்றிணைவுக்கு வழிவகுக்கும் என நம்புகிறேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்