கரும்பு, வாழையிலை, இஞ்சிக் கொத்து, மஞ்சள் கொத்து, பூ, மாலைகள் போன்றவையெல்லாம் இல்லாத பொங்கல் பண்டிகையை நம்மால் நினைத்துக்கூட பார்க்க இயலாது.
தைத்திருநாளுக்கு அழகு சேர்க்கும் இந்தப் பொருள்களைத் தேக்காவில் இருக்கும் கடைகள் விற்கத் தொடங்கிவிட்டன.
தேக்காவில் திரும்பிய பக்கமெல்லாம் பொங்கல் பானைகளும் உயரமான கரும்புகளும் தென்பட்டாலும் வாடிக்கையாளர்களை ஓரளவுதான் பார்க்க முடிந்தது.
கடைக்காரர்கள் பலர் இந்த ஆண்டு பொங்கலுக்கான வியாபாரம் சற்று மந்தமாக இருப்பதாகத் தமிழ்முரசிடம் பகிர்ந்துகொண்டனர்.
கரும்பும் வாழையிலையும் பெரும்பாலும் இந்தியா, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்னர் வரவழைக்கப்படுகின்றன.
இந்தியாவிலிருந்து கொள்கலன்களில் வந்திறங்கும் கரும்புகள் பெரும்பாலும் உலர்ந்து இருக்கின்றன என்றும் மலேசியாவிலிருந்து வரும் கரும்புகள் சற்று அன்றலர்ந்தவையாக (fresh) இருக்கும் என்றும் கடைக்காரர்கள் கூறுகின்றனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஜோதி ஸ்டோர் புஷ்பக் கடை தமிழ்நாட்டிலிருந்து வரும் கரும்பைத்தான் பெரும்பாலும் விற்று வருகிறது. வாடிக்கையாளர்களும் அதைப் பெரிதும் விரும்பி வாங்குவதாகக் கடையின் வியாபார மேலாளர் பாஸ்கரன் பஞ்சாட்சரம், 62, கூறினார்.
“இந்த ஆண்டு பொங்கலுக்குத் தேவையான பொருள்கள் சற்று விலை அதிகமாகவே உள்ளன. பல நாடுகளில் மழை, வெள்ளம் மோசமாக இருப்பதால் அது விளைச்சலைப் பாதித்துள்ளது,” என்றார் திரு பாஸ்கரன்.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு எதிர்பார்த்த அளவிற்குக் கூட்டம் இல்லை என்று கூறினார் ‘தி பெல் அண்ட் பேசில்ஸ் ஃபிளவர் டிரேடிங்’ கடை உரிமையாளர் மதியழகன் மணிகண்டன், 33.
பொங்கல் திருநாள் இம்முறை வாரநாளில் வருவதால் வாடிக்கையாளர்கள் பலர் பொங்கலுக்கு முந்தைய நாளன்று தேக்காவில் திரள்வர் என்று அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
ராஜா ஃபிளவர்ஷாப் கடையில் வாடிக்கையாளர்கள் பலர் மல்லிகைப் பூவை அதிகம் விரும்பி வாங்குவதாகச் சொன்னார் அதன் உரிமையாளர் அருண், 29.
“இந்தியாவில் மல்லிகை விளைச்சல் மோசமாக உள்ளது. அதனால், சிங்கப்பூரில் விலையைக் கூட்டித்தான் விற்க முடியும். 10 பெட்டிகள் தேவை எனக் கேட்டால் இரண்டு பெட்டிகள்தான் கிடைக்கின்றன,” என்றார் அருண்.
தமிழ்நாட்டிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்னர் கரும்பை இறக்குமதி செய்தது கார்த்திகா சூப்பர்மார்க்கெட்.
மலேசியாவிலிருந்து வரும் கரும்பு இன்னும் அன்றலர்ந்தவையாக இருக்கும் என்பது கார்த்திகா சூப்பர்மார்க்கெட்டில் பணிபுரியும் ஜபமணி கோபுகுமாரின், 50, கருத்து.
“தமிழகத்திலிருந்து வரும் கரும்பு வாடிப்போய் காணப்படலாம். மலேசியாவில் புதிதாகக் கரும்பை வெட்டி, உடனடியாக இங்கு அனுப்பிவைப்பதால் அவை பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
விலையேற்றத்திலும் குறையாத பொங்கல் உற்சாகம்
பொங்கல் திருநாள் வாரநாளில் வருவதால் குடும்பத்தோடு அந்த நாளன்று வேலையிலிருந்து விடுப்பு எடுக்க முடிவெடுத்துள்ளார் வெனீசா சிவபிரசாத், 65.
கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் அன்றலர்ந்த பொருள்களை வாங்கவும் அவர் திங்கட்கிழமை பிற்பகல் தேக்காவிற்கு வந்தார். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதாக அவர் சொன்னார்.
தலைப் பொங்கல் கொண்டாடும் ஈஸ்வரியும், 25, அவரது கணவர் பாலமுருகனும், 25, விரைவில் பிறக்கவிருக்கும் தங்களின் குழந்தையின் வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
வாரநாளில் வந்தாலும் சூரியன் உதிக்குமுன் பொங்கல் வைக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

