பொங்கலோ பொங்கல்!: வாழ்த்துகள் தெரிவித்த பிரதமர், மூத்த அமைச்சர்

2 mins read
45334c43-3a51-47ea-bccd-ffec89ac0d6d
பொங்கல் திருநாளைக் கொண்டாடும் சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்துக்குப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர். - படம்: தமிழ் முரசு

வியாழக்கிழமை (ஜனவரி 15) தை மாதம் பிறக்கிறது. இந்நாளன்று பொங்கல் திருநாள் உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், பொங்கல் திருநாளைக் கொண்டாடும் சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்துக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம், பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் லீ சியன் லூங் ஆகியோர் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் தங்கள் ஃபேஸ்புக்கில் பதிவிட்டனர்.

“தமிழர்களுக்கும், பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் பன்முக கலாசார சமூகத்தின் மகிழ்ச்சியில் பங்குகொள்ளும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். நான்கு நாள்கள் கொண்டாடப்படும், முக்கிய பொங்கல் பண்டிகை இரண்டாவது நாளான ஜனவரி 15ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஒரு பழங்கால அறுவடைத் திருவிழாவில் தோன்றிய இது, பூமியில் உயிர்களை நிலைநிறுத்த சூரியனையும் இயற்கையையும் நாம் எவ்வாறு சார்ந்துள்ளோம் என்பதை நினைவூட்டுகிறது,” என்றார் அதிபர் தர்மன்.

“மூன்றாம் நாளான மாட்டுப் பொங்கல் என்பது கால்நடைகளைக் கொண்டாடும் ஒரு கொண்டாட்டமாகும். அவை பாரம்பரியமாகக் குளிப்பாட்டப்பட்டு, நெற்றியில் அலங்காரங்கள் செய்யப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகின்றன. வரலாறு முழுவதும், விவசாயிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கும், வயல்களை உழுவதற்கும் கால்நடைகளை இது கௌரவிக்கிறது. பல சமூகங்களில் அவர்கள் இன்னும் அவ்வாறு செய்கிறார்கள்,” என்றும் திரு தர்மன் விவரித்தார்.

“பொங்கலோ பொங்கல் ! அறுவடை விழாவான பொங்கலை சிங்கப்பூர் தமிழ்ச் சமூகம் மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகிறது. அதுமட்டுமல்லாது, பல கலாசாரங்கள் செழித்தோங்கும் சிங்கப்பூரில், அதனுடைய முக்கிய, அர்த்தமுள்ள அங்கமாகப் பொங்கல் திருநாள் உள்ளது. பாரம்பரியத்தைக் கௌரவிக்கும் வகையிலும் வாழ்வில் கிடைத்த அனைத்து நலன்களுக்கு நன்றியுரைக்கவும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒன்று கூடும் நன்னாளாகப் பொங்கல் திருநாள் விளங்குகிறது. புதிய ஆண்டிற்குள் நம்பிக்கையுடனும் புத்துணர்ச்சியுடனும் அடியெடுத்து வைக்க பொங்கல் திருநாள் வகை செய்கிறது.

“பொங்கல் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். லிட்டில் இந்தியாவிலும் இந்திய மரபுடைமை நிலையத்திலும் நிறைந்திருக்கும் கொண்டாட்ட உணர்வை அனுபவித்து மகிழ சிறிது நேரத்தை ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று பிரதமர் வோங் பதிவிட்டார்.

“பொங்கலோ பொங்கல்! பொங்கல் வாழ்த்துகள்! பொங்கல் திருநாள் என்பது அறுவடை விழாவாகும், இதைச் சிங்கப்பூர் தமிழ்ச் சங்கம் கொண்டாடுகிறது. பற்பல நன்மைகளை அள்ளித் தரும் சூரிய பகவானுக்கும் இயற்கை அன்னைக்கும் பொங்கல் திருநாளன்று தமிழர்கள் நன்றி தெரிவிக்கின்றனர். பொங்கல் திருநாள் கொண்டாடும் அனைவரும் மகிழ்ச்சியுடனும் செழிப்புடனும் வாழ வாழ்த்துகிறேன்,” என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்