சிங்கப்பூருக்கு வந்துள்ள போப் பிரான்சிஸின் இரண்டாவது நாள், நாடாளுமன்றத்தில் அவருக்கான சடங்குபூர்வ வரவேற்புடன் தொடங்கியது.
இரவில் பெய்த மழை, வெயிலுக்கு வழிவிட்ட நிலையில் நார்த் பிரிட்ஜ் சாலையின் ஓரத்தில் கூடிய மக்கள், திருத்தந்தையை ஆவலுடன் வரவேற்றனர்.
சிங்கப்பூரிலேயே தயாரிக்கப்பட்ட ‘ஹியுண்டாய் ஐயோனிக் 5’ காரில் சென்றுகொண்டிருந்த போப்பும் மக்களை நோக்கி கையசைத்தார்.
நாடாளுமன்றக் கட்டடத்தின் வரவேற்பு மண்டபத்தில் சடங்குபூர்வ வரவேற்பு நடந்தேறியது.
87 வயது போப் ஃபிரான்சிஸ், ஆர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர். மூட்டுப் பிரச்சினையால் 2022 முதல் பொதுவெளியில் சக்கர நாற்காலியைப் பயன்படுத்திய போப் ஃபிரான்சிசுக்காக நாடாளுமன்றத்தில் சாய்வுப் பாதை அமைக்கப்பட்டு இருந்தது.
போப்பும் சிங்கப்பூரின் அதிபர் தர்மன் சண்முகரத்னமும் அருகருகில் அமர்ந்திருக்க, காவலர்கள் அவருக்கு மரியாதை செய்தனர்.
அவ்விரு தலைவர்களுக்கும் வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற ஆர்க்கிட் மலருக்குப் போப்பின் திருப்பெயர் சூட்டப்பட்டது.
‘டென்ட்ரோபினம் ஹிஸ் ஹோலினஸ் போப் பிரான்சில்’ என்ற அந்தப் புதிய கலப்பின மலரின் இதழ்கள், கிட்டத்தட்ட 8 சென்டிமீட்டர் அகலம் கொண்டவை.
தொடர்புடைய செய்திகள்
“இயேசுவின் பிறப்பை நோக்கி சாஸ்திரிகளை வழிநடத்திய விண்மீனைப் போல, நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒற்றுமைமிக்க சமூகத்தைக் கட்டமைப்பதில் அறிவொளி சிங்கப்பூரை வழிநடத்தட்டும்,” என்ற ஆசிச்சொற்களை போப் ஃபிரான்சிஸ், நாடாளுமன்ற வருகையாளர் புத்தகத்தில் எழுதி கையெழுத்திட்டார்.
வத்திகன் நகரத்தின் தலைவரான போப், சிங்கப்பூரின் பிரதமர் லாரன்ஸ் வோங்கையும் சந்தித்தார்.
கடந்த முறை போப் சிங்கப்பூர் வந்தது 1986ல். அப்போதைய இரண்டாம் போப் ஜான் பால், ஆசிய பசிஃபிக் வட்டாரச் சுற்றுலாவின்போது சிங்கப்பூரில் ஐந்து மணி நேரம் தங்கினார்.