கத்தோலிக்கப் பங்களிப்பைப் பாராட்டிய சிங்கப்பூர்த் தலைவர்கள்

கத்தோலிக்கப் பங்களிப்பைப் பாராட்டிய சிங்கப்பூர்த் தலைவர்கள்

3 mins read
63d062e7-d450-4c58-b6b9-eab1fd0fcf74
நாடாளுமன்றத்தில் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தைச் சந்தித்த போப் ஃபிரான்சிஸ். - படம்: இபிஏ
multi-img1 of 2

அதிபர் தர்மன் சண்முகரத்னம், பிரதமர் லாரன்ஸ் வோங் உள்ளிட்ட அரசாங்கத் தலைவர்களைச் சந்தித்த போப் ஃபிரான்சிஸ், நல்லிணக்கம், சுற்றுச்சூழல் ஆகியவை குறித்துப் பேசினார்.

மனிதகுலத்தின் ஒற்றுமைக்காக ஃபோப் பிரான்சிஸும் கத்தோலிக்கத் தேவாலயமும் ஆற்றிய பங்கினைச் சிங்கப்பூர்த் தலைவர்கள் புகழ்ந்தனர்.

சிங்கப்பூருக்கு வந்துள்ள போப் பிரான்சிஸின் இரண்டாவது நாள், நாடாளுமன்றத்தில் அவருக்கான சடங்குபூர்வ வரவேற்புடன் தொடங்கியது.

நாடாளுமன்றக் கட்டடத்தின் வரவேற்பு மண்டபத்தில் சடங்குபூர்வ வரவேற்பு நிகழ்ச்சி இடம்பெற்றது.

87 வயது போப் ஃபிரான்சிஸ், அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர். மூட்டுப் பிரச்சினையால் 2022 முதல் பொதுவெளியில் சக்கர நாற்காலியைப் பயன்படுத்திவரும் அவருக்காக நாடாளுமன்றத்தில் சாய்வுப் பாதை அமைக்கப்பட்டு இருந்தது.

போப்பும் சிங்கப்பூரின் அதிபர் தர்மன் சண்முகரத்னமும் அருகருகில் அமர்ந்திருக்க, காவலர்கள் அவருக்கு மரியாதை செய்தனர்.

அவ்விரு தலைவர்களுக்கும் அருகில் வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற ஆர்க்கிட் மலருக்குப் போப்பின் திருப்பெயர் சூட்டப்பட்டது.

‘டென்ட்ரோபினம் ஹிஸ் ஹோலினஸ் போப் ஃபிரான்சிஸ்’ என்ற அந்தப் புதிய கலப்பின மலரின் இதழ்கள், கிட்டத்தட்ட 8 சென்டிமீட்டர் அகலம் கொண்டவை.

“இயேசுவின் பிறப்பை நோக்கி, ஞானிகளை வழிநடத்திய விண்மீனைப் போல, நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒற்றுமைமிக்க சமூகத்தைக் கட்டமைப்பதில் அறிவொளி சிங்கப்பூரை வழிநடத்தட்டும்,” என்ற ஆசிச்சொற்களை போப் ஃபிரான்சிஸ், நாடாளுமன்ற வருகையாளர் புத்தகத்தில் எழுதி கையெழுத்திட்டார்.

நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த வரவேற்புக்குப் பிறகு போப் ஃபிரான்சிஸ் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பண்பாட்டு நிலையத்திற்குச் சென்றார்.

மனித சகோதரத்துவம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றின் முதன்மைக் குரலாக போப் திகழ்ந்துவருகிறார் எனக் கூறிய அதிபர் தர்மன் சண்முகரத்னம், இந்த அம்சங்கள் குறித்து தென்கிழக்காசியப் பயணத்தின்போது அவர் வாஞ்சையோடு பேசியதைக் குறிப்பிட்டார்.

பல்வேறு இன, சமய சமூகங்கள் ஒற்றுமையுடன் அமைதியாக வாழக்கூடிய நாட்டில் இருப்பதைச் சிங்கப்பூரர்கள் நிம்மதியாக உணர்வதாகத் திரு தர்மன் குறிப்பிட்டார்.

“சகிப்புத்தன்மைமிக்க சிங்கப்பூரின் பன்முகத்தன்மை எங்கள் வாழ்விற்கு செழுமை சேர்க்கிறது; எங்களது நாட்டின் அடையாளத்தை (பன்முகத்தன்மை) உறுதிசெய்து சிங்கப்பூரர்கள் என்ற பெருமையை அளிக்கிறது,” என்று அவர் கூறினார்.

“இது எதுவுமே இயல்பாக வந்ததன்று. மாறாக, பல ஆண்டுகளாக நாட்டைக் கட்டமைக்கும் பணியாக உருவெடுத்தது,” என்றார் திரு தர்மன்.

போப் ஃபிரான்சிஸ் சிங்கப்பூரின் பிரதமர் லாரன்ஸ் வோங்கையும் சந்தித்தார்.

போப்புடனான தம் சந்திப்பைப் பற்றி ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பிரதமர் லாரன்ஸ் வோங், சமய நல்லிணக்கம், பல சமயக் கலந்துரையாடல் ஆகியவற்றின் முக்கியத்துவத்துடன் சிங்கப்பூருக்கும் வத்திகன் நகருக்கு இடையேயான ஆர்வத்திற்குரிய பொது அம்சங்கள் பற்றியும் பேசப்பட்டன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலிருந்தே சிங்கப்பூருக்கும் வத்திகன் நகருக்கும் இடையே நல்லுறவு நிலவி வருவதாகத் திரு வோங் கூறினார்.

“அன்றுமுதல், கத்தோலிக்க அமைப்புகள் நம் சமூகத்திற்குப் பெரும்பங்காற்றி வருகின்றன. நம் பல்லின, பலசமய சமூகத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்கிற்காக நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்,” என்று அவர் சொன்னார்.

போப் ஃபிரான்சிஸ், தம் 12 நாள் ஆசிய பசிபிக் பயணத்தின்போது வருகை மேற்கொண்ட முதல் மூன்று நாடுகளில் தேவாலயங்களைச் சேர்ந்த ஆயர்களைச் சந்தித்தார்.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் போப் ஃபிரான்சிஸ், சிங்கப்பூரையும் வட்டார நாடுகளையும் சேர்ந்த கிட்டத்தட்ட 150 ஆயர்களையும் போதகர்களையும் சந்திப்பார்.

குறிப்புச் சொற்கள்