சிங்கப்பூருக்கு வந்திருக்கும் போப் ஃபிரான்சிசின் தலைமையின்கீழ் செப்டம்பர் 12ஆம் தேதி தேசிய விளையாட்டரங்கில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற இருக்கிறது.
இதனை முன்னிட்டு, அங்கு பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
சிங்கப்பூர் காவல்துறை, தற்காப்பு அமைச்சு ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் விளையாட்டரங்கில் ஓர் இடத்தையும் விடாமல் முழுமையாக அலசி சோதனையிட்டனர்.
போப்பாண்டவர் உட்பட கூட்டுப் பிரார்த்தனையில் பங்கெடுக்கும் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய செப்டம்பர் 11ஆம் தேதி இரவு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடத்தப்பட்டன.
காவல்துறை பாதுகாப்புத் தளபத்தியம், சிங்கப்பூர் ஆயுதப் படையின் ரசாயனம், உயிரியல், கதீர்வீச்சு மற்றும் வெடிபொருள் தற்காப்புக் குழு (CBRE) ஆகியவற்றைச் சேர்ந்த குறைந்தது 90 அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டனர்.
விளையாட்டரங்கெங்கும் நடைபெற்ற சோதனைப் பணிகளில் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன.