பிரபலமான வாழ்வியல் பாப்-அப் நிகழ்வான ‘ஆர்ட்பாக்ஸ்’ சிங்கப்பூரில் ஏழாவது முறையாக நடைபெற உள்ளது. இது சிங்கப்பூர் எக்ஸ்போ மண்டபம் 3ல் நடைபெறுகிறது.
அங்கு செல்பவர்கள் சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங், இந்தோனீசியா, தென்கொரியா மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட வளர்ந்து வரும் நிறுவனங்கள் விற்கும் பொருள்களை வாங்கி, உணவருந்தி மகிழலாம்.
தேசிய சிறுநீரக அறநிறுவனம், த ரெட் பென்சில், எம் மேக்கர்ஸ் போன்ற லாப நோக்கற்ற அமைப்புகளிடமிருந்து பொருள்களை வாங்குவதன் மூலம் தகுதியான நற்காரியங்களுக்கும் ஆதரவளிக்கலாம் என்று ஊக்குவிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல்) 5 வரையிலான முதல் சுற்றை தவறவிட்டால், ஏப்ரல் 10 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் அடுத்த சுற்றில் கலந்துகொள்ளலாம்.
இந்த நிகழ்வில் குழந்தைகளுக்காகவே சிறப்பாக ஒதுக்கப்பட்ட ஒரு பகுதி உட்பட ஏழு கருப்பொருள்கள் கொண்ட பகுதிகள் இடம்பெற்றுள்ளன. பேச்சு மற்றும் நாடகம், புலன்சார் விளையாட்டுகள், கலை, கைவினைப் பொருள்கள் உட்பட மூன்று முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் அங்கு இடம்பெறுகின்றன.
ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், 6.2 மீட்டர் உயரமும் 4.8 மீட்டர் நீளமும் கொண்ட சுழல் சறுக்கு மரம் உட்பட இரண்டு சறுக்கு மரங்களைக் கொண்ட விளையாட்டு மைதான அமைப்பிலும் விளையாடி மகிழலாம்.
ஏப்ரல் 10 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் ரத்த தான முகாமுக்கு ஆதரவளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ரத்த தானம் செய்பவர்களுக்கு, கையிருப்பு இருக்கும் வரை இலவசமாக ‘விகல் விகல் டஃப்பல்’ வழங்கப்படும்.
நுழைவுச்சீட்டுகளின் விலை $7லிருந்து தொடங்குகிறது. மேல் விவரங்களுக்கு artbox.sg என்ற இணையப்பக்கத்துக்குச் செல்லவும்.

