இரண்டு பாப்புலர் புத்தகக் கடையின் கிளைகள் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மூடப்படவுள்ளன.
மற்றொரு கிளை மீண்டும் திறக்கப்படவுள்ளது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அந்த நிறுவனம், கடைத்தொகுதிகளின் சில்லறை வர்த்தகத் திட்டங்கள் காரணமாக விவோசிட்டி, ஜூரோங் பாயின்ட் கிளைகள் மூடப்படுவதாகத் தெரிவித்தது.
கடந்த 2018ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட விவோசிட்டி கிளை ஆகஸ்ட் 16க்குப் பிறகு மூடப்படும். அதுவரை அங்குச் சலுகை விற்பனை நடைபெறும்.
1995ஆம் ஆண்டுமுதல் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவரும் ஜூரோங் பாயின்ட் கிளை செப்டம்பர் 13க்குப் பிறகு அதன் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளும்.
அந்தக் கடையில் சலுகை விற்பனை ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 13 வரை நடைபெறும்.
ஹவ்காங் கடைத்தொகுதியில் மேற்கொள்ளப்பட்டுவந்த முக்கியப் புதுப்பிப்புப் பணிகளுக்கு இடையே, கடந்த ஜனவரி மாதம் அதன் பழைய கிளை மூடப்பட்டது.
வரும் செப்டம்பர் 4ஆம் தேதி அங்குப் புதிய கிளையை பாப்புலர் நிறுவனம் திறக்கவுள்ளது. அந்தக் கடைத்தொகுதியில் புதுப்பிப்புப் பணிகள் செப்டம்பர் மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“மேலும் எந்தக் கிளையையும் மூடும் திட்டம் எங்களுக்கு இல்லை என்பதை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம்,” என்று பாப்புலர் நிறுவனம் கூறியது.
இரண்டு கிளைகள் மூடப்படுவதால் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள மற்ற கிளைகளில் தொடர்ந்து பொருள்களை வாங்கலாம் என்றும் அது தெரிவித்தது.


