சிங்கப்பூரின் எதிர்காலப் பாதை, சமூகச் சவால்கள் மாறிவரும் வேலைச்சூழல் குறித்த உரையாடல்கள் பரவலாக ஒலிக்கும் வேளையில், நாட்டின் 200க்கும் மேற்பட்ட இந்தியச் சமுதாயத் தலைவர்கள் ஒன்றுகூடி முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசித்தனர்.
பிரதமர் லாரன்ஸ் வோங்கின் 2026ஆம் ஆண்டு தேசிய தினப் பேரணி உரையைத் தொடர்ந்து, மக்கள் கழக நற்பணிப் பேரவை ஏற்பாடு செய்திருந்த சிறப்பு கலந்துரையாடல் சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெற்றது.
கல்வி, நீடித்த நிலைத்தன்மை சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி, சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை ஆகியோர் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினர்.
சமுதாயத் தலைவர்களின் புதிய பரிணாமம்
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பேசிய திரு முரளி, சிங்கப்பூரில் இந்தியச் சமுதாயத் தலைவர்களின் பங்கு பெருமளவில் உருமாறியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
“முன்பெல்லாம் கலாசார நிகழ்வுகளை நடத்துவதே முதன்மைப் பணியாக இருந்தது. ஆனால் இன்று, தொகுதிகளில் உள்ள எளியக் குடும்பங்களை அடையாளம் கண்டு உதவும் ‘செவிகளாக, கண்களாக’ சமுதாயத் தலைவர்கள் செயல்படுகிறார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.
அவரைத் தொடர்ந்து பேசிய டாக்டர் ஜனில், பிரதமர் லாரன்ஸ் வோங் தமது தேசிய தினப் பேரணி உரையில் முன்வைத்த முக்கியக் கருத்துகளைத் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் கொண்டு சேர்க்கும் பாலமாகச் சமுதாயத் தலைவர்கள் திகழ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
வேலை-வாழ்க்கைச் சமநிலை
தேசிய தினப் பேரணி உரையில் அறிவிக்கப்பட்ட கூடுதல் குழந்தைப் பராமரிப்பு விடுப்பு குறித்த விவாதத்துடன் கலந்துரையாடல் தொடங்கியது. இன்றைய இளையர்கள் நிதி ரீதியாகத் தங்களை நிலைநிறுத்திக்கொண்ட பிறகே குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதால், வேலைவாய்ப்புச் சூழலை மேலும் குடும்ப ஆதரவு சார்ந்ததாக மாற்ற வேண்டியதன் அவசியத்தைப் பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர்.
அதேவேளையில், மூத்தோர் மாற்றுத்திறனாளி பெற்றோரைக் கவனித்துக் கொள்ளும் குடும்பங்களுக்கும் விடுப்பு ஆதரவுகள் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
மேலும், இந்தியர்களிடையே நீரிழிவு நோய் பாதிப்புகள் அதிகமாக உள்ள சூழலில், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஆக்டிவ் எஸ்ஜி உதவித்தொகையை $100லிருந்து அதிகரித்து, விரிவான உடல் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பங்கேற்பாளர்கள் மத்தியில் ஒலித்தது.
மேலும், நற்பணிச் செயற்குழு உறுப்பினர்களுக்குச் சான்றளிக்கப்பட்ட உடற்பயிற்சிப் பயிற்றுவிப்பாளர் பயிற்சி வழங்கி, அவர்கள் மூலமாகவே குடியிருப்பாளர்களுக்கு வகுப்புகள் நடத்தலாம் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டது.
கல்விமுறை மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையில் இளையர்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்கள் கலந்துரையாடலில் தனியிடத்தைப் பிடித்தன.
குறிப்பாக செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வரும் சூழலில், ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ போன்ற திட்டங்கள் மூலம் வாழ்நாள் முழுவதும் புதிய திறன்களை மேம்படுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை அமைச்சர்கள் தெளிவுபடுத்தினர்.
நிகழ்ச்சியின் நிறைவில் பேசிய டாக்டர் ஜனில், பங்கேற்பாளர்கள் கேள்விகளோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், சமுதாய மாற்றத்திற்குத் தாங்களாகவே பல நல்முயற்சிகளை எடுத்து வருவதாகக் கூறியது நெகிழ்ச்சியளிப்பதாக உள்ளதாக குறிப்பிட்டார்.


